மேற்குஇந்திய தீவு போட்டிகளில் முதன்முறையாக ஐபிஎல் வீரர்களை களமிறக்கியுள்ள பிசிசிஐ!

மும்பை:

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கான வீரர்கள், அறிவிக்கப்பட்டுள்ளனர்.  இதில் புதுமுக வீரர்களாக ஐபிஎல் போட்டிகளில் கலக்கி வந்த நவ்தீப் சைனி மற்றும் ராகுல் சாஹர் போன்ற வர்கள் முதன்முறையாக இடம்பெற்றுள்ளனர்.  இது பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நவ்தீப் சைனி, ராகுல் சாஹர்  யார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 3ந்தேதி முதல் செப்டம்பர் 3ந்தேதி  சுமார் ஒரு மாதம்  வரை மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அப்போது, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள், மூன்று  டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இத்தொடருக்கான வீரர்கள், எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு வெளியிட்டுள்ளது. அணியில் நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். அதேபோல இந்திய அணி0யின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டி யாவுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் கீப்பர் எம்.எஸ்.தோனி ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட வில்லை என்பதால் அவருக்கு பதில் ரிசப் பண்ட் கீப்பராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுடன்  ஷ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, நவ்தீப் சைனி ஆகியோர் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான அணிகளில் இடம்பெற்றுள்ளனர்.

உலகக் கோப்பைத் தொடர் முடிந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள் இந்திய அணியில் ஏற்பட்டது. தோனி ஓய்வு பெற வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.  இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலில்  தோனி, பும்ரா, ஹர்திக் பாண்டியா  பெயர் அறிவிக்கப்படவில்லை. மேலும், .ராஜஸ்தானை சேர்ந்த லெக் ஸ்பின் சுழற்பந்து வீச்சாளரான ராகுல் சாஹார், நவ்தீப் சைனி  போன்ற ஐபிஎல் அதிரடி வீரர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

 ராகுல் சாஹார் 

ஐபிஎல் வீரரான ராகுல் சாஹார்  ராஜஸ்தானை சேர்ந்தவர்.  லெக் ஸ்பின் சுழற்பந்து வீச்சாளரான  சாஹார் இதுவரை 16 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார்.  15 போட்டிகளில் பவுலிங் செய்து 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

2019 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய ராகுல் சாஹார், மும்பை அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய பங்காற்றினார்.  மேலும்,  இந்தியா U 19, ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட், ராஜஸ்தான், இந்தியா U 23, சர்வீசஸ், இந்திய பிரசிடெண்ட் அணி, மும்பை இந்தியன்ஸ், இந்தியா சி, இந்தியா ஏ, ரெஸ்ட் ஆஃப் இந்தியா ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ளார்.

நவ்தீப் சைனி:

அரியானாவை சேர்ந்தவர்  நவ்தீப் சைனி. வேகப்பந்து வீச்சாளரான இதுவரை 13 ஐபிஎல் போட்டி களில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.  கடந்த உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணி வலைப் பயிற்சி மேற்கொள்ள பிசிசிஐ தேர்வு பவுலர்களில் கலீல் அகமதுவைத் தொடர்ந்து முக்கியமான வீரராக நவ்தீப் சைனி இருந்தார்.

கடந்த 2013ம் ஆண்டுவரை எந்தவொரு அணியிலும் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடி வந்த ஷைனி, எந்தவொரு அதிகாரப்பூர்வமான ஆட்டங்களிலும் சேர்க்கப்படாத நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக  ஐபிஎல் உள்பட பல போட்டிகளில் ஆடி ஆடி வருகிறார்.

இதுவரை டெல்லி, இந்தியா ஏ, டெல்லி கேப்பிடல்ஸ், இந்தியா கிரீன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ரெஸ்ட் ஆஃப் இந்தியா, இந்தியா, இந்தியா பி, இந்தியா சி ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ளார்.

முதன்முதலாக கவுதம் கம்பீரின் முயற்சியால், 2013-14 ஆண்டுகளின் ஐபிஎல் போட்டிகளில், டெல்லி அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவே அவரது முதல் சிறப்புமிக்க ஆட்டமாக அமைந்தது. அதுபோல 2017-18ம் ஆண்டு ரஞ்சிக்கோப்பையில் விளையாடி அசத்தினார். ஆட்டத்தின்போது முதல் இன்னிங்சில் 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

தற்போது முதன்முறையாக இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.