சஞ்சய் மஞ்சரேக்கரின் வேண்டுகோளை நிராகரித்த பிசிசிஐ!

மும்பை: ஐபிஎல் 2020 தொடருக்கான வர்ணனையாளர் குழுவில், சஞ்சய் மஞ்சரேக்கருக்கு இடமளிக்க மறுத்துவிட்டது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இதன்மூலம் இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் மஞ்சரேக்கரின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் நடைபெறவுள்ள 13வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வர்ணனையாளர்கள் தேர்வு செயல்பாட்டில், கவாஸ்கர், சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக், ஹர்ஷா போக்லே மற்றும் சில வெளிநாட்டு வர்ணனையாளர்களின் விருப்பதைக் கேட்டுள்ளது பிசிசிஐ. ஆனால், அப்படியான ஒரு அழைப்பு சஞ்சய் மஞ்சரேக்கருக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இதுதொடர்பான இறுதிமுடிவு பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய்ஷா ஆகியோரிடம்தான் உள்ளது என்று கூறப்படுகிறது.

கொரோனா காரணமாக பாதியில் கைவிடப்பட்ட இந்தியா – தென்னாப்பிரிக்கா தொடருக்கு முன்னதாக பிசிசிஐ வர்ணனையாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் மஞ்சரேக்கர். ஆனால், தன்னை ஐபிஎல் தொடருக்கான வர்ணனையாளர் குழுவில் சேர்த்துக் கொள்ளுமாறு சமீபத்தில் பிசிசிஐ அமைப்பிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.