இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராகிறார் சுனில் ஜோஷி! பிசிசிஐ பரிந்துரை

டெல்லி:

பிசிசிஐயின் கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷியை தேசிய தேர்வுக் குழுவின் தலைவராக பரிந்துரைத்துள்ளது. இதன் காரணமாக அவர் தேர்வுகுழுத் தலைவராக நியமனம் செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், தேர்வு குழு உறுப்பினர் ககன் கோடா ஆகியோரின் பதவி காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இவர்களுக்கு பதிலாக புதிய தேர்வாளர்களை தேர்வு செய்ய, மதன்லால், ஆர்.பி.சிங், சுலக்‌ஷனா நாயக் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டியினர், தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் 5 பேரை இறுதி செய்துள்ளனர். இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், சுனில் ஜோஷி, தமிழகத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன், ராஜேஷ் சவுகான், ஹர்விந்தர்சிங் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

இவர்களிடம் மும்பையில்  இன்று நேர்காணல் நடத்தப்பட்டது. இதில், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷி பெயர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவரையே தேசிய தேர்வு குழுவுக்கு பரிந்துரைத்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில்,  ‘முன்னாள் ஆல்-ரவுண்டர் அஜித் அகர்கரும் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் இறுதி செய்யப்பட்ட பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.