மும்பை: வரும் 24ம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில், ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் மற்றும் அமித்ஷா மகன் ஜெய்ஷா -விற்கு புதிய பதவி வழங்குவது குறித்த முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

மேலும், இந்த ஆண்டு பொதுக்குழுவில் ஆலோசிக்கப்படவுள்ள 23 அம்சங்கள் குறித்து, அனைத்து மாநில கிரிக்கெட் அமைப்புகளுக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் தற்போது 8 அணிகள் மட்டுமே உள்ளன. எனவே, அகமதாபாத்தை அடிப்படையாகக் கொண்ட மேலும் இரண்டு அணிகளை சேர்ப்பது குறித்து இக்கூட்டத்தில் இறுதியான முடிவு எடுக்கப்படவுள்ளது. அதானி குழுமம், மற்றும் சஞ்சீவ் கோயங்கா (ரைஸிங் புனே சூப்பர் ஜெயிட்ன்ஸ்) குழுமத்தினர் இரு புதிய அணிகளுக்கு ஆர்வமாக இருக்கின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ சார்பில் ஒரு பிரதிநிதி தேர்வு செய்யப்பட வேண்டும். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கான பிரதிநிதியாக பிசிசிஐ செயலாளரும் அமித் ஷா மகனுமான ஜெய் ஷா தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

இதுதவிர, இந்திய அணியின் தேர்வுக் குழுவுக்கு நிர்வாகிகள் யாரும் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை. மேலும், கிரிக்கெட் குழுவுக்கும், நிலைக்குழுவுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவி்ல்லை. இவற்றுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.