வயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் BCG, கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா?: ICMR ஆய்வு

சென்னையில் உள்ள ICMR- இன் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (NIRT) விஞ்ஞானிகள், காசநோய்க்கு எதிராக முதன்மையாகப் பயன்படுத்தப்படும் பேசிலஸ் கால்மெட்-குய்ரின் (BCG) தடுப்பூசியை வயதான நபர்களுக்கு வழங்கும்போது, அவர்களின் உள்ளார்ந்த மற்றும் தகவமைப்பு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்பாடு அடைவதை கண்டனர். எனவே, இது கோவிட்டிலிருந்து பாதுகாக்க உதவுமா என ஆராய்ந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மீது BCG தடுப்பூசியின் விளைவையும் தாக்கத்தையும் ஆராயும் முதல் மருத்துவ பரிசோதனைகளில் இதுவும் ஒன்றாகும்.

தீவிர தொற்றுநோயின் ஆரம்ப நாட்களிலிருந்து, காசநோய் பாதிப்புக்குள்ளான நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் காசநோய் தடுப்பூசி கோவிட்டிலிருந்து பாதுகாக்க உதவும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த கூற்றுக்கள் BCG திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கும் நாடுகளில் குறைவான கோவிட் தொற்று மற்றும் இறப்பு விகிதங்களைக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டது.

தி ப்ரிண்டிற்கு அளித்த பேட்டியில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) பேராசிரியரான கோவர்தன் தாஸ், BCG தடுப்பூசிகளுக்கும் கோவிட் நிகழ்வுகளின் குறைந்த விகிதங்களுக்கும் உள்ள தொடர்பை எடுத்துரைத்தார். அவரது குழுவின் ஆராய்ச்சி பின்னர் நேச்சர் இதழில் வெளியிடப்பட்டது.இருப்பினும், அந்த நேரத்தில், இந்த கூற்றை ஆதரிப்பதற்கான மருத்துவ பரிசோதனை மற்றும் தரவின் பற்றாக்குறை இருந்தது – இது பல விஞ்ஞானிகள் அதை நிராகரிக்க வழிவகுத்தது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதனும் குழந்தை பருவத்தில் கொடுக்கப்பட்ட தடுப்பூசி வயது வந்த காலத்தில் வேறுபட்ட வைரஸுக்கு பாதுகாப்பு விளைவை அளிக்கும் சாத்தியம் இல்லை என்று கூறியிருந்தார். ஆயினும்கூட, பல நாடுகள் கோவிட் -19 க்கு எதிரான BCG தடுப்பூசியின் செயல்திறனை சோதிக்க மருத்துவ பரிசோதனைகளை வடிவமைத்தன.