டில்லி

நீதிபதி பதவிக்கு விண்ணப்பிக்க புதிய பட்டதாரிகளுக்குத் தடை விதிக்கக் கோரி பார் கவுன்சில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

பொதுவாக நீதிபதிகள் நியமன தேர்வுக்கு வழக்கறிஞராகப் பணி புரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பித்து வந்தனர்.  அதே வேளையில் புதிய சட்ட பட்டதாரிகளும் இந்த பதவி நியமனத்துக்கு விண்ணப்பித்துத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் நீதிபதிகள் ஆக முடியும்.  இதன் மூலம் வழக்கு அனுபவம் இல்லாமலே நீதிபதிகள் ஆக முடியும் என்னும் நிலை உள்ளது.  இந்நிலைக்கு வெகுநாட்களாக எதிர்ப்பு இருந்துள்ளது.

ஆந்திர மாநில அரசு புதிய சட்ட பட்டதாரிகளை நீதிபதிகள் நியமனத்துக்கு விண்ணப்பிக்கத் தடை விதித்தது.  இவ்வாறு அனுபவம் இல்லாத புதிய பட்டதாரிகளைப் பொறுப்பான நீதிபதி பதவிக்கு நியமிக்கக் கூடாது என அந்த தடையில் தெரிவித்திருந்தது.  இதற்கு இந்திய பார் கவுன்சில் மற்றும் ஆந்திர மாநில கவுன்சில் ஆகியவை ஆதரவு அளித்துள்ளது.   இந்த தடைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மனுவில் நீதிபதிகளுக்கு நீதிமன்ற நடைமுறை குறித்த அனுபவம் அவசியம் தேவை.  எனவே வழக்கறிஞராக குறைந்தது  மூன்று வருட அனுபவம் அவசியம் தேவை.  எனவே நாடெங்கும் புதிய பட்டதாரிகள் நீதிபதி பதவிக்கு விண்ணப்பிக்கத் தடை செய்ய வேண்டும்.  3 வருடத்துக்குக் குறைவான அனுபவம் பெற்றோர் விண்ணப்பிக்க கூடாது எனச் சட்டம் இயற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.