பெலந்தூர் ஏரி : ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுமா?

பெங்களூரு

பெங்களூரு நகரில் உள்ள பெலந்தூர் ஏரியின் பராமரிப்பை ராணுவம் மேற்கொள்ள வேண்டும் என பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

பெங்களூரு நகரின் முக்கிய நீர்தேக்கமான பெலந்தூர் ஏரி சுமார் 951 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.   இந்த ஏரியின் கரையில் இந்திய ராணுவ மையத்தின் பயிற்சி அலுவலகங்கள் உள்ளன.   இந்த ஏரியை பராமரிப்பது குறித்து அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ளன.   இதுவரை மூன்று சுற்று பேச்சு வார்த்தைகள் நடைபெற்றும் முடிவை எட்டவில்லை.

தற்போது பெங்களுரு மேம்பாட்டு ஆணையம் இந்த ஏரியின் பராமரிப்பை ராணுவம் மேற்கொள்ள வேண்டி ஒரு கடிதம் எழுதி உள்ளது.

அந்த கடிதத்தில், “கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி ஏரியில் தீ விபத்து ஏற்பட்டது.   அப்போது ராணுவத்தின் உதவி கோரப்பட்டது.   அவர்களும் உதவினார்கள்.    ஏரிக்கரையில் ராணுவ அலுவலகங்கள் அமைந்துள்ளதால் அதை பராமரிக்கும் முழுப் பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தால் இந்த ஏரியின் பராமரிப்பை முழுமையாக செய்ய இயலவில்லை.   பாதுகாப்புத் துறையில் இந்த ஏரியை பராமரிக்கும் அளவுக்கு வல்லுனர்களும் பணியாளர்களும் உள்ளனர். அதனால் இந்த ஏரியின் முழுப் பராமரிப்பையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.” என குரிப்பிடப்படுள்ளது

இது குறித்து  ராணுவ அதிகாரி ஒருவர், “இந்த ஏரியை பராமரிப்பது ராணுவத்தின் பணிகளில் ஒன்றில்லை.    இருந்தாலும் சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரத்தை மனதில் கொண்டு பராமரிப்பு குறித்து மாநில அரசுடன் விவாதம் நடத்தப்பட்டது.   மேலும் பசுமைத் தீர்ப்பாயம் இந்த ஏரி முழுவதும் மாசுபடும் அபாயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.  அதனால் இது குறித்து எங்கள் மேல் அதிகாரிகளுடம் பேசிய பிறகு முடிவெடுக்க உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.