கொரோனா குறித்து பயமோ, பீதியோ தேவையில்லை! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை

லகெங்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திவரும் கொரோனா வைரைஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை, விழிப்புடன் தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் அதிக உயிர்ப்பலியை ஏற்படுத்திவரும் கொரோனா வைரசின் தாக்கம் பல நாடுகளிலும்  கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் குறைந்த அளவில் பலர் இந்நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

சீனாவில் இந்நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 2% ஆகும். உலகளவில் இது 02%ஆக உள்ளது. எனவே இதுகுறித்து  மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

பொதுமக்கள் தங்களையும் தங்களின் வாழ்விடங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்வதுடன் நோய் பற்றிய விழிப்புணர்வும் மக்களுக்கு அவசியம், இந்நோயிலிருந்து தமிழக மக்கள் தங்களை காத்துகொள்ள முகக் கவசம் அணியத் தேவையில்லை  எனக் கூறினார்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், கொரோனா வைரசின் பரவலுக்கு எதிராக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், “தற்போது வரை தமிழகத்தில் யாரும் கொரோனா வைரசின் தொற்றுதலுக்கு ஆளாகவில்லை.

தீவிரக்காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்ட 1000க்கும் மேற்பட்டோர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் நாள்முழுவதும் கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கபடுகின்றனர் என்றார்.

எனவே மக்கள் இந்நோய் பற்றி அச்சம் அடையத் தேவையில்லை. மருத்துவமனைகளில் இதற்கென விரைவில் சிறப்பு வார்டுகள் அமைக்க உள்ளதாகவும், சமூக வலைதளங்களில் இதுகுறித்து வெளியாகும் தகவல்களை நம்பாமல் காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவதே நல்லது எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.