கவனம்!: சீமானுக்கு தீபா கணவர் மாதவன் எச்சரிக்கை!

“மறைந்த தலைவர்கள் பற்றி தவறாக பேசுவதா? பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்!” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு,  எம்.ஜி.ஆர். ஜெ.ஜெ. திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும், ஜெ.தீபாவின் கணவருமான க.மாதவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி கடந்த  2011 ஆம் ஆண்டு தீக்குளித்து மாண்டார் செங்கொடி.

இவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, “திராவிட சுடுகாடு மெரினா! அது தமிழர்களுக்கு தீண்டத்தகாத இடம்! மூன்று ஆண்களுடன் ஒரு பெண்ணும் புதைக்கப்பட்டுள்ளார்” என்று பேசினார்.

அவரது பேச்சுக்கு  எம்.ஜி.ஆர். ஜெ.ஜெ. திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும், ஜெ.தீபாவின் கணவருமான க.மாதவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சீமான் – மாதவன்

இது குறித்து தனது முகநூலில் மாதவன் பதிவிட்டுள்ளதாவது:

“தமிழ் ,தமிழ் மக்கள் என எந்நேரமும் அரசியல் ஆதாயத்திற்காக பேசிக் கொண்டு, ஒற்றுமையாக  அனைவரிடத்திலும் அன்பு காட்டி வாழும் தமிழக மக்களை,  மூளைச் சலவை செய்வதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை.
முதலில் தமிழரின் பண்பாட்டோடு நடத்தல் வேண்டும்.

சீமானுடைய கூற்றின்படியே வைத்தாலும் சாதாரண மக்களாகிய நம்மை புதைக்கும் சுடுகாட்டிலும் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் புதைக்கப்பட்டிருக்கிறார்கள், அதற்காக அங்கு புதைக்கப்பட்டிருக்கும் பெண்கள் மற்றும் ஆடவரை இப்படித்தான் கொச்சைப்படுத்தி பேசுவாரா? திராவிட சுடுகாட்டில் மட்டுமல்ல, எல்லா சுடுகாட்டிலுமே ஆண் பெண் பேதமின்றி அனைவருமே ஒரே மைதானத்தில் (சுடுகாட்டில்) தான் புதைக்கப்படுகிறார்கள்.

சீமானின் பாட்டனும் பூட்டியும் கூட அவ்வாறே புதைக்கப்பட்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

இறந்தவர்கள் யாராக இருப்பினும் இறந்தவர்கள் பற்றி தவறாக பேசுதல் கூடாது என்ற அடிப்படை நாகரீகம் கூட இல்லாது, இறந்து அங்கு புதைக்கப்பட்டிருப்பவர்கள் யாவரும் நம்மை ஆண்ட ( அதுவும் தமிழக மக்களால் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட) முன்னாள் முதல்வர்கள் என்ற மரியாதை சிறிதும் இல்லாது,

அதுவும் தமிழக மக்கள் இன்றும் தெய்வமாக போற்றும் புரட்சி தலைவரையும் , இரும்பு பெண்மணியான புரட்சி தலைவியையும் கொச்சைப்படுத்தி பேசும் சீமான் அவர்களே, நீங்கள் பேசிய பேச்சு உங்களை சுற்றியுள்ள ஒரு சில பேரை வேண்டுமானால் சந்தோஷப்படுத்தியிருக்கலாம்.

ஆனால் எஞ்சியுள்ள தமிழக மக்கள் யாவரையும் இந்த பேச்சு முகம் சூழிக்க வைத்துள்ளது. இவர் பேசிய பேச்சை கேட்ட அந்த ஒரு சில பேரை நினைத்து வருத்தபடுகின்றேன், வேதனைபடுகின்றேன்.

பேசும் வார்த்தைகளில் கவனம் இருக்கட்டும். மக்கள் உங்களை இன்னும் ஏற்றுக்கொள்ளவே இல்லை, அதை மனதில் கொள்ளுங்கள், அதற்குள் இவ்வளவு பேச்சா?பேசிய வார்த்தைகளுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” – இவ்வாறு அந்த பதிவில் க. மாதவன் தெரிவித்துள்ளார்.