கொல்கத்தா

நீதிபதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் எனச் சாபமிட்ட வழக்கறிஞர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

பெண்கள் குறிப்பாக அதிகம் படிக்காத பெண்கள் தங்கள் சண்டையின் போது எதிராளிக்குக் கொள்ளை நோய் வரவேண்டும். எனச் சபிப்பது வழக்கமாகும்.   தற்போது அந்த வழக்கத்தை பலரும் மறந்து விடட  போதிலும் கொல்கத்தாவை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் மறக்காமல் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பங்கர் தத்தா ஒரு வழக்கை விசாரித்து வந்தார்.  அந்த வழக்கு கடன் தொகை செலுத்தாததால் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து அலகாபாத் வங்கி பேருந்தைச் ஜப்தி செய்தது குறித்த வழக்காகும்.   அந்த பேருந்தை ஏலத்தில் விடுவதாக வங்கி அறிவித்து இருந்தது.   இதனை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கில் பேருந்து உரிமையாளர் சார்பாக வழக்கறிஞர்  பிஜாய் அதிகாரி வாதாடி வந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி பிஜாய் அதிகாரி மனு ஒன்றை நீதிபதி பங்கர் தத்தாவிடம் அளித்தார்.  இதை அவசர வழக்காக விசாரிக்க மறுத்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.   அவர் தீர்ப்பைப் படிக்கும் போது  தீர்ப்பை மாற்றச் சொல்லி பலமுறை பிஜாய் குறுக்கிட்டார்.  ஆனால் அவர் அதற்கு மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வழக்கறிஞர், “உங்களுக்கு எதிர்காலம் பாழாய்ப் போகும். உங்களை கொரோனா வைரஸ் தாக்க வேண்டும்” எனச் சாபம் இட்டுள்ளார்.   இதையும் தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி பங்கர் இதற்காக  வழக்கறிஞர் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சிபாரிசு செய்தார்

இதையொட்டி கொல்கத்தா நீதிமன்றம் வழக்கறிஞர் பிஜாய் அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.    வழக்கறிஞருக்கு இதுகுறித்து விளக்கம் அளிக்க கோரி நோட்டிஸ் அனுப்பி உள்ளது.  இந்த வழக்கு கோடைக்கால விடுமுறைக்குப் பிறகு விசாரணைக்கு வர உள்ளது.