புதுடெல்லி:

ந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது, பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சுமார் 200 ஏக்கர் பரப்பில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டெல்லியிலிருந்து காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணி கடைசி நிலையில் இருக்கிறது. தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது பலர் வதந்திகளை பரப்பக்கூடும். இதில் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக செயல்பட்டு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

சுகாதார கட்டமைப்பை பொறுத்தவரையில், இந்தியா உலக அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது. இந்த வருடத்தின் கடைசி நாளை, கொரோனாவுக்கு எதிராகப் போராடிய சுகாதாரப் பணியாளர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

சுதந்திரத்திற்குப் பிறகு நெடுநாட்களாக இந்தியாவில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 10 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றார் பிரதமர் மோடி.

இதனிடையே, கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ஓரிரு நாள்களில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலெரியா தெரிவித்துள்ளார்.