சென்னை: பருவமழை காலத்தில் எந்த நேரத்திலும், எந்த இடத்தில் பணியாற்ற தயாராக இருங்கள் என மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதனை மேலும் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை யினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்கள் பரவலை தடுக்கும் வகையில் தமிழக சுகாதாரத்துறை பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
இதற்கிடையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் அவ்வப்போத மழை பெய்து வருகிறது. இந்த  நிலையில், மழைக்காலத்தில் எந்த நேரமும், எந்தப் பகுதியிலும் பணியாற்ற தயாராக இருக்கவேண்டும் என சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட அரசுப் பணியாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் அரசு டாக்டர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

மேலும், மாவட்டவாரியாக உள்ளாட்சி அமைப்பினர், வருவாய்த் துறையினர், பேரிடர் மீட்புத் துறையினருடன் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளவேண்டும். மீட்பு வாகனங்கள், மீட்புக் குழு, சுகாதார ஆய்வாளர்கள், இதர சுகாதாரத் துறை பணியாளர்கள், 24 மணி நேரமும் மீட்புப் பணிகளுக்காகத் தயாராக இருக்கவேண்டும்.

மருத்துவமனைகள், அரசு சுகாதார மையங்களில் மின்தடை ஏற்படாத வண்ணம், ஜெனரேட்டர் வசதியை மேம்படுத்த வேண்டும். மேலும், டார்ச் லைட் போன்ற அவசரகால மின் சாதனங்களையும் தயார் நிலையில் வைக்கவேண்டும்.

மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள், போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு இருப்பதை உறுதி செய்யவேண்டும். பொதுமக்கள் தங்கவைக்கப்பட உள்ள மீட்பு முகாம்களில் கொரோனா மற்றும் மழைக்கால நோய் பரவலைக் கடுப்படுத்த, மருத்துவக் குழுவினர் வாயிலாக, முகாம்கள் நடத்தப்படவேண்டும்.

புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மழைக்கால காய்ச்சலைப் பரப்பும் கொசு புழு உருவாகும் இடங்களைக் கண்டறிந்து அழிக்கவேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.