பலாத்கார சாமியார் ஆஸ்ரமத்தில் பலர் கொன்று புதைப்பு!! முன்னாள் பாதுகாவலர் அதிர்ச்சி தகவல்

டில்லி:

பலாத்கார சாமியாரின் ஆஸ்ரமத்தில் பலர் கொன்று புதைக்கப்பட்டிருப்பதாக அவரது முன்னாள் பாதுகாவலர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சாமியார் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலத்தில் ஆயிரம் ஏக்கரில் இவரது ஆஸ்ரமம் அமைந்துள்ளது. லட்சகணக்கான ஆதரவாளர்களை கொண்டுள்ள இவர் பணம் மற்றும் அதிகார பலத்துடன் வளம் வந்தார்.

சாமியார் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது முன்னாள் பாதுகாவலர் பீன்ட் சிங் என்பவர் ‘டைம்ஸ் நவ்’ செய்தி சேனலுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது, ‘‘சிர்ஸா பகுதியில் உள்ள ஆஸ்ரம வளாகத்தில் பலர் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர்’’ என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

இந்த தகவல் வெளியானவுடன் மேலும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. ஏற்கனவே வன்முறை சம்பவத்திற்கு ஈடாக சாமியாரின் சொத்துக்களை முடக்க ஹரியானா, பஞ்சாப் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் 30 பிரார்த்தனை மையங்களை மாநில அரசு ஏற்கனவே மூடி சீல் வைத்துள்ளது.

அடுத்தகட்டமாக ஆஸ்ரமத்தை கைப்பற்றவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் தற்போது பிணங்கள் புதைக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அடுத்த கட்ட விசாரணையை தொடங்க போலீசாருக்கு மாநில அரசு உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடயங்களை அழிப்பதற்குள் விரைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.