சர்க்கஸையும் சாகடிக்கும் கொரேனா….பட்டினியால் தவிக்கும் பெருங்கூட்டம்… 

--

சர்க்கஸையும் சாகடிக்கும் கொரேனா….பட்டினியால் தவிக்கும் பெருங்கூட்டம்…

ஒரு காலத்தில் பெரும் பொழுதுபோக்கு அம்சமாக இருந்து பிரம்மாண்டமாக, வயது வித்தியாசமின்றி அனைவரையுமே மகிழ்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்திய சர்க்கஸ் கலை ஏற்கெனவே அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு இப்பவோ அப்பவோ என்று தான் இருக்கிறது.  இந்த சூழலில் வந்த இந்த கொரோனா ஊரடங்கு சர்க்கஸ் கலைக்கு இருந்த கொஞ்ச நஞ்ச உயிரையும் பறித்து படுகுழியில் தள்ளிவிட்டது என்றே சொல்லலாம்.

60 ஆண்டுகளாக வெற்றிகரமாகப் பல்லாயிரம் காட்சிகளை நிகழ்த்தி மக்களை மகிழ்வித்த புகழ்பெற்ற பாம்பே சர்க்கஸ் தனது கடைசி நிகழ்ச்சியினை மார்ச் 16-ம் தேதியன்று நிகழ்த்தியது.  ஆனால் அதுவே இவர்களின் கடைசி காட்சியாகிவிடுமோ என்கிற அச்சத்தில் இருக்கின்றனர் இக்குழுவில் இருக்கும் 200 பேரும்.

இக்குழுவில் 60 ஆண்டுகளாக ஜோக்கர் வேசம் போட்டு மக்களைச் சிரிக்க வைத்த 74 வயதான துளசி தாஸ் சௌத்ரி, “இந்த 60 நாட்களில் சந்தித்தது போன்ற ஒரு கொடுமையான வாழ்க்கையை இதுவரை என் வாழ்நாளில் அனுபவித்ததில்லை” என்கிறார் இந்த ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும் என்கிற எதிர்பார்ப்புடன்.

ஒரு நாள் ஷோ நடத்த எங்களுக்கு இரண்டு லட்சம் வரை செலவாகுது.  ஆனா இப்போ காட்சிகள் ரத்து செய்யப்பட்ட சூழலில் இங்க இருக்கிறவங்க சாப்பாட்டு செலவு, மிருகங்களின் உணவு, மின்சாரம் போன்ற இதர செலவுகள் எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கி ரூ. 30,000/- வரை ஆகுது.  வருமானம் ஏதுமில்லாத இந்த நேரத்திலும், அவங்கவங்க குடும்ப செலவுக்குனு பாதி சம்பளம் குடுத்திட்டு வரேன்.  ஆனா கைல இருந்த காசெல்லாம் காலியாகிட்டே வருது.  இனி அடுத்து என்ன செய்றதுனே தெரியல” என்று புலம்புகிறார் சர்க்கஸ் ஓனர் சஞ்சீவ் பாலகோபால்.

வேறு வழியின்றி, இப்போது Milaap என்னும் ஆன்லைன் நிறுவனம் மூலமாக Crowd funding முறையில் பொதுமக்களிடமிருந்து நிதி வசூல் செய்து வருகிறார்.  “எனக்கு வேற வழி தெரியல. அரசு ஊரங்கை தளர்த்தி நாங்க ஷோ நடத்தினா தான் அடுத்து வருமானமே.  அதுவரை சாப்பிட மட்டுமாவது பணம் வேணுமே.  அதான் கடைசியா இந்த முயற்சில இறங்கிட்டேன்” என்கிறார் கண்ணீருடன்.

“காலைல எழுந்திரிக்கிறதிலிருந்து பேப்பரை புரட்டிகிட்டு, தேநீரை குடிச்சுக்கிட்டு சதா சர்வ நேரமும் வருமானத்துக்கு என்ன செய்றதுங்கிறதை யோசிச்சுக்கிட்டு இருக்கிறது தான் என் வேலைனு ஆகிடுச்சு.  இந்த சர்க்கஸ் தொழிலே வாய்க்கும், வயித்துக்கும் பத்தாம போயிட்டு இருக்கும் போது இந்த ஊரடங்கு எங்க வாழ்க்கையையே சின்னாபின்னமாக்கிடுச்சு.  எப்போ தான் ஷோ ஆரம்பிக்கும்னு ஆவலோட காத்திருக்கேன்” என்னும் இவரது எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறட்டும் என்று வாழ்த்துவோம் இந்த சர்க்கஸ் தினமான மே 9 அன்று.

– லெட்சுமி பிரியா