ஈரான் மீதான தடையால் கச்சா எண்ணெய் விலை உயரும் : நிபுணர்கள் தகவல்

ண்டன்

ரான் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயரும் என பிரிட்டன் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொண்டது. அதை ஒட்டி ஈரானுடன் வர்த்தகம் செய்ய பல நாடுகளுக்கு அமெரிக்கா ஆறு மாத கெடு விதித்திருந்தது. ஆறு மாதங்களுக்கு பிறகும் இந்த நாடுகள் ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்தால் அந்த நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.

அமெரிக்கா அளித்த இந்த கெடு முடிவுக்கு வந்துள்ளதாக கடந்த திங்கள் அன்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் அறிவிப்பு விடுத்துள்ளனர். விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளான இந்தியா, சீனா, துருக்கி, ஜப்பான், தென் கொரியா, இத்தாலி, தைவான் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு மே மாதம் முதல் ஈரானிடம் இருந்து கச்சா என்ணெய் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதை ஒட்டி பிரிட்டன் பொருளதார நிபுணரான மார்கரெட் யங், “தற்போதுள்ள நிலையில் அமெரிக்கா அறிவித்துள்ள நாடுகள் இனி ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி செய்தால் அமெரிக்கா வழங்கும் அனைத்தும் பொருளாதார உதவிகளும் நிறுத்தப்படும்.

ஈரான் மீதான தடையால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு உண்டாகும்.  தட்டுப்பாடு அதிகரிக்கும் எந்த பொருளுக்கும் விலை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது, எனவே எண்ணெய் உற்பத்தி நாடுகள் விலைகளை மாற்றி அமைக்கும். இதனால் கச்சா எண்ணெய் விலை உயர மிகவும் வாய்ப்பு உள்ளது.

கடந்த இரு தினங்களாக எரிபொருள் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்து வருகின்றன.  லண்டன் பங்கு வர்த்தக சந்தையில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவன பங்குக்ல் விலை 2.4% மற்றும் ஷெல் நிறுவன பங்குகள் விலை 2.3% ஒரே நாளில் உயர்ந்துள்ளன.

இவை அனைத்தும் கச்சா எண்ணெய் விலை உயர்வை முன் கூட்டியே அறிந்துக் கொள்ள உதவும் அறிகுறிகளாகும்” என தெரிவித்துள்ளார்.