சென்னை:

த்தியஅரசு கொண்டுவந்துள்ள மாட்டிறைச்சி தடை விவகாரத்தில், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் வெளிநடப்பு செய்தனர்.

அதிமுவின் இரட்டை இலை சின்னம் மூலம் வெற்றிபெற்ற  எம்.எல்.ஏ.க்களான  தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர், அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பி தெரிவித்து  வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக, சட்டப்பேரவையில், மாட்டிறைச்சி விவகாரம் குறித்து, திமுக சார்பில் தனிநபர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசினார். அப்போது,  அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, மேகாலயா மாநிலங்களில் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக  தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டி பேசினார். மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளை எதிர்த்து பேரவையில் தீர்மானம் தேவை என்றும்,  இந்த விவகாரத்தில் மௌனமாக இருப்பது ஏன்? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த முதல்வர், தமிழகத்தில் பசுவதைத் தடைச் சட்டம் 40 ஆண்டுகாலமாக அமலில் உள்ளது என்றும் மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு செயல்படும் என்றும், இதுகுறித்து நீதிமன்ற தீர்ப்பு வந்தபிறகே முடிவு எடுக்கப்படும் என்றும், பெரும்பான்மையான மக்கள் மாட்டிறைச்சி விவாகரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும் கூறினார்.

முதலமைச்சரின் பதிலில் திருப்தி இல்லை எனக் கூறி திமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.

அதைத்தொடர்ந்து அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களான  தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக ஏற்கனவே, அதே கட்சியை சேர்ந்த  டிடிவி தினகரன் அணியை சேர்ந்த தங்கதமிழ்செல்வன் நேற்று வெளிநடப்பு செய்திருந்ததை தொடர்ந்து, இன்று ஆதரவு கட்சி எம்எல்ஏக்கள் 3 பேர் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.