மாட்டிறைச்சி தடை: மத்தியஅரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்!

திருவனந்தபுரம்,

த்தியஅரசு புதியதாக கொண்டு வந்துள்ள மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை செய்துள்ள சட்ட திருத்தத்தை எதிர்த்து கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது, மாட்டிறைச்சி விற்கக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்  சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது.

மாட்டிறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யப்படுவதை நாடு முழுக்க தடை செய்வதாகவும் அதில் தெரிவித்துள்ளது.

இந்த சட்டதிருத்தத்துக்கு நாடு முழுவதும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கேரளா அரசு, சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம்  கேரள சபாநாயகர் தலைமையில்  இன்று காலை தொடங்கியது.

சட்டமன்றத்தில் மத்திய அரசு விதித்துள்ள  இறைச்சிக்காக மாடுகள் விற்க தடை தொடர்பாக சிறப்புக் கூட்டத்தில் விவாதம் தொடங்கியது.

விவாதத்தில் பாரதியஜனதா கட்சி தவிர,  காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பிராந்திய கட்சி உறுப்பினர்கள் காரசாரமாக பேசினர்.

அதைத்தொடர்ந்து கேரள முதல்வர் பிரனாயி விஜயன் மத்திய அரசு சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

இந்த தீர்மானதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதியஜனதா உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து மாற்றுக்கட்சி ஆதரவுடன்  தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே, மத்திய அரசின்  மாட்டு இறைச்சி தடை சட்டத்துக்கு தமிழக மதுரை ஐகோர்ட்டு கிளை தடை விதித்துள்ள நிலையில், கேரளா ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.