மாட்டிறைச்சி தடை: மத்தியஅரசு சட்டத்தை தமிழக அரசு ஏற்காது! அமைச்சர் ராஜு

சென்னை,

த்தியஅரசு கொண்டுவந்திருக்கும் மாட்டிறைச்சி தடை மற்றும் மாடுகள் விற்பனை தடை சட்டத்தை தமிழக அரசு ஏற்காது என்று தமிழக தகவல்தொடர்புதுறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறி உள்ளார்.

தமிழகத்தில் மத்தியஅரசின் மாட்டிறைச்சி தடையை எதிர்த்து பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு,

. ‘தமிழக அரசு, மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதை மு.க.ஸ்டாலின் தவறாகப் பேசுகிறார். தீயணைப்புத் துறையினரின் தீவிர முயற்சியால் சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட விபத்தில் தீ அருகில் உள்ள மற்ற கட்டடங்களுக்குப் பரவாமல் தடுக்க முடிந்தது.

மாட்டு இறைச்சி தொடர்பான சட்டத்தை தமிழக மக்கள் தொடர்ந்து எதிர்க்கும்பட்சத்தில் தமிழக அரசு அந்தச் சட்டத்தை ஏற்காது’ என்று தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, தமிழக கால்நடைதுறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியோ எந்தவிதமான கருத்துக்களையும் கூறாத நிலையில், தமிழக செய்தித்துறை அமைச்சர் இந்த கருத்தை கூறியிருப்பது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தமிழக முதல்வர் செய்ய வேண்டிய பல  செயல்களை, தமிழக நிதி அமைச்சரான ஜெயக்குமாரே செய்துவருவதும், அவரே பெரும்பாலான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வதும், பிரச்சினைக்குறிய போராட்டங்கள்  பற்றி பேச்சு நடத்துவதும்,

தமிழகத்தில் யார் முதல்வர் என்றே தெரியவில்லை என்று கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வரும் வேளையில்,

தற்போது அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை கூறி வருவதும் அமைச்சர்கள் யாரும் தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிவதாக  தலைமை செயலக வட்டார  அதிகாரிகள் கூறுகின்றனர்.