டில்லி,

த்தியஅரசு கொண்டுவந்துள்ள மாட்டிறைச்சி தடை உத்தரவுக்கு நாடு முழுவதும் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், சட்டம் குறித்து மறு ஆய்வு செய்ய தயாராக உள்ளது  மத்திய மந்திரிகள் கூறி உள்ளனர்.

மத்தியஅரசு கடந்த மாதம் 26-ந்தேதி, மாடுகள், ஒட்டகம் போன்றவற்றை இறைச்சிக்காக சந்தை களில் விற்க மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனிடையே மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப் பட்டது. அப்போது மத்திய அரசின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும் இது தொடர்பாக 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

இதுகுறித்து மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-

யாருடைய உணவு பழக்கவழக்கத்தையும் கட்டுப்படுத்த நாங்கள் (மத்திய அரசு) ஒரு போதும் விரும்பியது இல்லை. மக்கள் விரும்பும் உணவை உண்ண தடை ஏதும் கிடையாது. ஆனால் அதே சமயம் பசுக்களை பாதுகாப்பதில் அரசுக்கு என்று அரசியலமைப்பு கோட்பாடுகள் உள்ளன.

பசுக்களை பாதுகாக்க நாம் ஒரு சில விஷயங்களில் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். இந்த இரு விஷயத்திலும் சமநிலையை நாம் கடைபிடிக்க வேண்டும். எனவே மத்திய அரசு இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய தயாராக இருக்கிறது.

மத்திய சுற்றுச்சூழல் மந்திரி ஹர்ஷ்வர்தன் கூறியதாவது,

மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு மாடுகளை விற்க விதித்த தடை குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் என்று கூறியிருந்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து  மத்தியஅரசு விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு 2 வாரங்கள் அவகாசம் அளித்து இருக்கிறது. நாங்கள் அதுவரை காத்திருக்க போவதில்லை. முன்னதாகவே எங்கள் தரப்பு விளக்கத்தை தாக்கல் செய்வோம்.

இந்த உத்தரவால் யாரும் பாதிக்கக்கூடாது என்பதே எங்களின் எண்ணம். இது தொடர்பான அறிவிப்பை மறு ஆய்வு செய்ய இருப்பதாக ஏற்கனவே நாங்கள் தெரிவித்து இருக்கிறோம். இதன் மூலம் மக்களிடையே உள்ள சந்தேகம், தவறான கருத்துகள் நீங்கும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே புதுச்சேரி, கேரளா, மேகாலயா போன்ற மாநிலங்களில் மத்தியஅரசின் மாட்டிறைச்சி தடை சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அதுபோல், இந்த விவகாரத்தில்  நாடு முழுவதும் மக்களிடையே கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள மத்தியஅரசு தற்போது தனது நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாகத்தான் மத்திய அமைச்சர்களின் தற்போதைய அறிவிப்பு… இதன் காரணமாக மாட்டிறைச்சி தடை சட்டத்தில் சில திருத்தங்களை விரைவில் எதிர்பார்க்கலாம் என டில்லி வட்டார தகவல்கள் கூறுகிறது.