ஃபேஸ்புக்கில் மாட்டிறைச்சி பதிவு: நாகை அருகே இஸ்லாமிய வாலிபர் மீது தாக்குதல்

நாகை:

மூக வலைதளமான ஃபேஸ்புக் இணையதளத்தில் மாட்டிறைச்சி சூப் சாப்பிடுவதை புகைப்படத் துடன் பதிவிட்ட நாகை மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் மீது சரமாரியாக தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் முகம்மது பைசான்,. இவர் சில நாட்களுக்கு முன்பு மாடு இறைச்சியுடன் சூப் சாப்பிடும் புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, அதனுடன் மாட்டுக்கறி மாட்டுக்கறித்தான் என்று பதிவிட்டிருந்தார்.

இதை கண்ட இந்து அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் சிலர் சேர்ந்து, முகம்மது பைசானை  கம்பி, கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் பைசான் பலத்த காயம் அடைந்த நிலையில்., அந்த பகுதி மக்கள், அவரை மீட்டு,  நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பைசானின் உறவினர்கள் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகளும், போராட்டம் நடத்தப்போவதாக கூறி உள்ளனர்.

இதையடுத்து காவல்துறையினர் விசாரணையை முடுக்கினர். அதில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள், இந்து மக்கள் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களையும் தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இதுநாள்வரை வடமாநிலங்களில் நடைபெற்று வந்த இதுபோன்ற சம்பவம், தற்போது தமிழகத்தில் புதிதாக முளைத்திருப்பது பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசும், காவல் துறையும் இதுபோன்ற செயல்களுக்கு துணைபோகாமல், முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும், தமிழகத்தில் அமைதியை பேணி காக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Beef soup, Hindutva youths, Islamic youth, nagapattinam
-=-