பீலா ராஜேஷ் மாற்றம் மாபெரும் இழப்பு : ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் கருத்து

--

சென்னை

சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது தமிழகத்துக்கு மாபெரும் இழப்பு என ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரப்தீப் கவுர் கூறி உள்ளார்

 

தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று வணிகவரித்துறைச் செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  அவருக்குப் பதில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியும் வருவாய் நிர்வாக ஆணையருமான ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் ஏற்கனவே இந்த பதவி வகித்தவர் ஆவார். இவர் வருவாய் நிர்வாக ஆணையர் பதவியையும் கவனிக்க உள்ளார்.

தமிழக மக்களிடையே இடையே பீலா ராஜேஷ் இடமாற்றம் பரபரப்பையும் விமர்சனங்களையும் உருவாக்கி உள்ளது.

ஐ சி எம் ஆர் துணை இயக்குநர் மற்றும்  தொற்று நோய் நிபுணருமான பிரப்தீப் கவுர் தனது டிவிட்டரில், “பீலா ராஜேஷ் கொரோனா காலத்தில் சிறந்த தலைமையாகச் செயல்பட்டவர் ஆவார். தமிழகத்தின் பல் மாவட்டங்களில் கொரோனா கட்டுப்படுத்த காரணமானவர் பீலா ராஜேஷ்.  அவர் இடமாற்றம் செய்யப்பட்டது தமிழகத்துக்கு மாபெரும் இழப்பு” எனப் பதிந்திருந்தார்.

ஆனால் சிறிது நேரத்துக்குள்ளாகவே பிரப்தீப் கவுர தனது பதிவை நீக்கி விட்டார்.  கொரோனா பாதிப்பு அடைந்தோருக்குச் சிகிச்சை அளிப்பது, கட்டுப்படுத்துவது, பொது முடக்க நீட்டிப்பு ஆலோசனை ஆகிய பணிகளைச் செய்ய தமிழக அரசு 19 மருத்துவ நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இதில் முக்கிய நபராக பிரப்தீப் கவுர் இடம் பெற்றுள்ளார்.