டில்லி

கொரோனா தடுப்பூசி மருந்துகள் 2021 ஆம் வருடத் தொடக்கத்துக்கு முன்பு கிடைக்காது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

உலகெங்கும் உள்ள பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.   இதில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள மருந்து முதல் இருகட்ட மனித சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளது.  இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் இந்த மருந்தின் மூன்றாம் கட்ட மனித சோதனைகளை அடுத்த மாதம் நடத்த உள்ளது.

இதைத் தவிர இந்தியாவில் உள்ள பரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்துடன் இணைந்து கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து மனித சோதனை தொடக்கப்பட்டுள்ளது.  இதைப் போல் ஒவ்வொரு நாட்டிலும் மனித சோதனைகள் நடந்து வருகின்றன.

இது குறித்து உலக சுகாதார மையம் தலைவர் மைக் ரியான், “உலகெங்கும் கொரோனா தாக்கம் அதிக அளவில் உள்ளது.  அகில உலக அளவில் தாக்கம் கட்டுக்கடங்காமல் செல்கிறது.  எனவே சரியான ஒரு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பது அவசியமாகி உள்ளது  உலகின் பல நாடுகளிலும் இந்தப் பணிகள் நடந்து வருகின்றன.   ஆனால் எங்கும் மூன்றாம் கட்ட சோதனைகள் முடிவடையவில்லை.

இதுவரை நடந்த இரு கட்ட சோதனைகளில் அனைத்து மருந்துகளுமே தேர்ச்சி பெற்றுள்ளன.   அனைத்து மருந்துகளும் பாதுகாப்பானவை மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடியவை ஆகும்.    இந்த மருந்துகள் மூன்றாம் கட்ட சோதனைகள் முடிவுகளை ஆய்ந்த பிறகு இவற்றுக்கு விற்பனை அனுமதி அளிக்கப்படும்.  அனேகமாக 2021 தொடக்கம் வரை இந்தப் பணிகள் முடிவடையாது  என்பதால் அதற்கு முன்பு தடுப்பூசி கிடைக்காது” எனத் தெரிவித்துள்ளார்.