நியூட்டனுக்கு முன் புவியீர்ப்பை சொன்ன இந்தியச் சிற்பங்கள் : மத்திய அமைச்சர்

டில்லி

நியூட்டனுக்கு வெகு காலம் முன்பே புவியீர்ப்பு குறித்து இந்திய சிற்பங்கள் தெரிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறி உள்ளார்.

ஆர் எஸ் எஸ் துணை அமைப்பான சிக்‌ஷா சன்ஸ்கிருதி உத்தான் நியாஸ் என்னும் அமைப்பு ஞானோத்சவ் என்னும் நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்வில் மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், ஆர் எஸ் எஸ் தலைவர்  மோகன் பகவத், யோகா குரு பாபா ராம்தேவுக்கு நெருக்கமான பாலகிருஷ்ணா மற்றும் பல ஆர் எஸ் எஸ் பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர். மற்றும் ஐஐடி, என் ஐ டி, பல்கலைக்கழக நிதி ஆணையம் உள்ளிட்ட பல கல்வி நிலையங்களின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் ரமேஷ் போக்ரியால், “இந்தியா அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் முதன்மையாக இருந்தது எனக் கூறும்போது இளைஞர்கள் என்னிடம் வினா எழுப்புகின்றனர். அதைப் போல் யோகா குறித்துப் பேசினால் மக்கள் அதை எதிர்க்கின்றனர். நாம் முந்தைய காலத்தில் பெற்றிருந்தது குறித்து நமது இளைஞர்களிடம் சரியாக நவீன முறையில் தெரிவிப்பதில்லை.

அதனால் நான் அனைத்து ஐஐடி மற்றும் என் ஐ டி இயக்குநர்கள் இந்த பழங்கால அறிவு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். நாம் சரக  முனிவர், ஆரிய பட்டா போன்றோர் இருந்த போது கண்டறிந்த உண்மைகள் குறித்துத் தொடர்ந்து பேச வேண்டும். நமது சிற்பங்கள் அனைத்தும் நீயூட்டன் கண்டு பிடிப்பதற்கு முன்பே புவியீருப்ப்பு விசை தத்துவம் குறித்து நமக்குத் தெரிவித்துள்ளன.” என தன் உரையில் தெரிவித்துள்ளார்.