பெய்ஜிங்:

மாசு பாதிப்பு காரணமாக சீன தலைநகர் பெய்ஜிங் பனி புகையில் சிக்கி தவிக்கிறது. 22 மில்லியன் மக்கள் தொகையுடன் உள்ள நாட்டின் தலைநகரை பாதுகாக்கும் வகையில், சுற்றியுள்ள பகுதிகளில் பசுமை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனாவின் வடக்கு மாகாணமான ஹிபெய் அரசு ‘‘பசுமை நெக்லஸ்’’ திட்டத்தை இணையதளத்தில் அறிவித்துள்ளது.

ஈர நிலங்களை சீரமைத்தல். தொழிற்சாலைகளில் காலியாக உள்ள நிலத்தில் மரம் நடுதல், ஆறு, மலை, ஏரி போன்ற இயற்கை வளங்களை சுற்றி பசுமை வளையம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. அதோடு வடக்கு பெய்ஜிங்கில் உள்ள ஜூவோஜூவோ நகரத்தையும் மென்மை நகரமாக மாற்றும் வகையில் நீராதாரங்களை மறு சுழற்சி செய்யவும், அவற்றை தக்கவைத்து வறண்ட நகரை பாதுகாக்கவும் ஹிபெய் அரசு உறுதி ஏற்றுள்ளது என்று இணையதள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை பொழிவு வீழ்ச்சி, மக்கள் தொகை அதிகரிப்பு, நிலத்தடி நீர் மாசு, ஆண்டிற்கு ஒரு குடிமகனுக்கு 100 க்யூபிக் மீட்டர் தண்ணீர் என்ற நிலைக்கு ஜூவோஜூவோ தள்ளப்பட்டுள்ளது. தியான்ஜின் என்ற 15 மில்லியன் மக்கள் தொகை கொண்ட துறைமுக நகருக்கும் ஹிபெய், பெய்ஜிங் இடையிலான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தின் தொடர்ச்சியாகவே இந்த பசுமை நெக்லஸ் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.

பெய்ஜிங் மற்றும் இதர பிராந்தியங்களை பாலைவனம் மற்றும் மோசமான மண் புயலில் இருந்து பாதுகாக்கும் வகையில் வனப்பகுதிகளை ஒருங்கிணைத்து பசுமை பெருஞ்சுவர் அமைக்கும் திட்டம் 2050ம் ஆண்டில் நிறைவடையும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.