20 ஆண்டுகளில் முதல்முறையாக சீனாவில் மக்கள் தொகை வீழ்ச்சி!

பீஜிங்:

டந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கில் மக்கள் தொகை குறைந்துள்ளது, என சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறி உள்ளது.

உலகின் அதிக ஜனத்தொகை உள்ள சீனாவில், மக்கள் தொகையை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் பயனாக சீன தலைநகரில் மக்கள் தொகை குறைய தொடங்கி உள்ளது.

சீன தலைநகரான  பீஜிங்கில் கடந்த ஆண்டு (2017)ல்  21,707 மில்லியன் மக்கள் நிரந்தர குடியிருப்பாளர்களாக இருந்தனர். இது கடந்த 2016ம் ஆண்டைவிட 22,000 குறைவு என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், பீஜிங் நகரத்தின் ஆறு நகர்ப்புற மாவட்டங்களில் உள்ள மக்களின் எண்ணிக்கை 2016-ல் இருந்ததை விட 2017-ல் 3 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

சீனாவில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், வள பற்றாக்குறை மற்றும் வீட்டு விலை பண வீக்கம் ஆகியவற்றை எளிதாக்க அதிகாரிகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளின் ஒரு பகுதியாக நகரின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவில் கடந்த 1998-ம் ஆண்டில் இருந்து பீஜிங்கின் மக்கள்தொகை மூன்றில் இரண்டு பங்கு உயர்ந்துள்ளது, இதனால் ஆற்றல் நுகர்வு இரட்டிப்பாகவும், வாகனங்களின் எண்ணிக்கை மும்மடங்காகவும் அதிகரித்துள்ளது. பீஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற பெரிய நகரங்கள் மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்த முற்படுகையில், சீனா ஒட்டு மொத்தமாக அதன் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துவருகிறது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் வயதான மக்கள் தொகை இந்த ஆண்டு 240 மில்லியனிலிருந்து 2035-ம் ஆண்டின் இறுதியில் 400 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், சீனாவின் சமூகப் பாதுகாப்பு சங்கம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆராய்ச்சி தரவுகளின் படி, அதன் சுகாதார சேவைகள் மற்றும் ஓய்வூதிய நிதிகள் கடுமையான நெருக்கடியை சந்திக்கும் என அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.