பெளகாவி

ர்நாடக மாநிலம் பெளகாவி நகர் தேவாலய  பேராயர் காவி உடையில் தோன்றிய புகைப்படம் சர்ச்சையை எழுப்பி உள்ளது.

இந்தியாவில் கிறித்துவர்கள் இந்து மத வழக்கங்களை காப்பி அடித்து  வருவதாக சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனம் எழுப்பப்பட்டு வருகின்றன.    ஒரு சில கிறித்துவ தேவாலயங்கள் இந்துக் கோவில்களைப்போல் கோபுரங்களுடன் கட்டப்பட்டுள்ள புகைப்படம் பகிரப்படுகின்றன.   அத்துடன் ஏசுவை இந்து மதக் கடவுள்கள் உருவில் சித்தரிக்கும் புகைப்படங்களும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் பெளகாவி நகரில் உள்ள ரோமன் கத்தோலிக்க  தேவாலயத்தின் பேராயர் டெரெக் ஃபெர்னாண்டஸ் காவி உடையைல் ஒரு தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யும் புகைப்படம் வெளியானது.   அந்தப் புகைப்படத்தில் அவர் மற்றும் அவருடன் உள்ள மற்றவர்கள் அனைவருமே காவி உடை அணிந்துள்ளனர்.  பேராயர் ருத்திராட்ச மாலை அணிந்து நெற்றியில் சிகப்புக் வண்ண திலகத்துடன் காணப்படுகிறார்.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம்  எழுந்துள்ளது.  பேராயர் ஃபெர்னாண்டஸ் இந்துக்களைக் கவர்ந்து மதமாற்றம் செய்ய இவ்வாறு நடந்துக் கொள்வதாகக் குற்றம் சாட்டி உள்ளனர்.  கிறித்துவர்களில் பலர் தங்கள் மதத்தை பேராயர் அவமதித்துள்ளதாகக் கூறி உள்ளனர்.   தற்போது ரோம் நகருக்குச் சென்றுள்ளதால் பேராயரின் கருத்து அறியப்படாமல் உள்ளது.

இது குறித்து பெளகாவி தேவாலய தலைமை அதிகாரி பிலிப் குட்டி ஜோசப், “இங்கிருந்து 28 கிமீ தொலைவில் உள்ள தெஷ்னூர் தேவாலயத்தில் கடந்த 29 ஆம் தேதி நடந்த விழாவில்  இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.    இந்த தேவாலயம் முதலில் விராக்தா மடம் ஆக இருந்தது.   கடந்த 40 வருடங்களுக்கு முன்பு இங்குள்ள மடாதிபதிகள் கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொண்டனர்.

அவர்கள் இன்னும் தங்களுடைய பழைய பழக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.    அவற்றில் காவி உடையும் ஒன்றாகும்.   அந்த தேவாலயத்தில் ஒரு சிவ லிங்கமும்  அமைந்துள்ளது.   இது லிங்காயத்துகள் அதிகமுள்ள பகுதியாகும்.  அங்குள்ள பாதிரியார்கள் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவார்கள்.   அங்குப் பூஜைக்கு வரும் மற்ற பாதிரிகளுக்கும் இதே காவி உடை அளிக்கப்படும்.  அவ்வகையில் பேராயர் காவி உடை அணிந்துள்ளார்” எனக் கூறி உள்ளார்.

ஆயினும் சமூக வலைத்தளங்களில் பேராயருக்கு தொடர்ந்து கண்டனக்குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன.