பெல்ஜிய நிறுவன கொரோனா தடுப்பூசி ஒரே டோசில் 66% திறன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு

புரூசெல்ஸ்

பெல்ஜிய நாட்டின் ஜான்சென் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி ஒரே டோசிலேயே 66% திறன் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

பெல்ஜிய நாட்டில் உள்ள ஜான்சென் மருந்து நிறுவனம் உலகப் புகழ் பெற்ற ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துடையதாகும்.  இந்நிறுவனம் தற்போது கொரோனா தடுப்பூசி ஒன்றைக் கண்டுபிடித்து அதை உலகெங்கும் சோதனை செய்து வருகிறது.   இந்த தடுப்பூசி மூலம் ஏற்கனவே உலகில் பலரை கொரோனாவில் இருந்து காத்துள்ளதாக நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “இந்த கொரோனா தடுப்பூசி ஜலதோஷ தடுப்பூசியில் இருந்து உருவாக்கப்பட்டதாகும்.  இந்த தடுப்பூசியானது உடலின் கொரோனா வைரஸ் அணுக்களை அழிக்கும் வல்லமையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.  எனவே இது கொரோனா உடலில் பரவாமல் தடுக்கும் திறன் கொண்டுள்ளது.

இந்த தடுப்பூசி ஒரே டோசில் 66% திறன் உள்ளதாகச் சோதனையில் தெரிய வந்துள்ளது.

மற்ற கொரோனா தடுப்பூசிகள் இரு டோஸ்கள் தேவைப்படும் போது இந்த மருந்து ஒரே டோசில் 66% நோய்த் தடுப்பு திறனை அளிக்கிறது.  இந்த தடுப்பூசிக்கு ஏற்கனவே பிரிட்டன் அரசு 3 கோடி டோஸ்களுக்கு ஆர்டர் அளித்துள்ளது.  இந்த மருந்து சோதனையில் எவ்வித பக்கவிளைவுகளும் கண்டறியப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.