நம்பினாலும் நம்பாவிட்டாலும், இனி உங்க வாழ்க்கை இப்படித்தான்

நம்பினாலும் நம்பாவிட்டாலும், இனி உங்க வாழ்க்கை இப்படித்தான்

கொரோனாவக்கு முந்தைய வாழ்க்கை இனி பலருக்கும் கிடைக்குமா என்றால் சந்தேகம்தான். இனி வரும் காலங்களில் நாட்டில் ஏற்படுத்தப்போகும் சில முக்கிய மாற்றங்கள் தவிர்க்கவே முடியாததாக இருக்கப்போகின்றன என்கின்றனர் பொருளாதாரம் மற்றும் வாழ்வியல் நிபுணர்கள்.. ஒவ்வொரு துறை வாரியாகவும் அவர்கள் எதிர்கால விளைவுகளைப் பட்டியலிடுகின்றனர்…

மருத்துவம் – நாட்டிலுள்ள டாக்டர்கள் மற்றும் நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் எத்தனை என்பது போன்ற தரவுகளைக் கணக்கெடுப்பது அரசின் உடனடி பணியாக இருக்கும்.  இனி சுகாதாரம் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக மாறுவது உறுதி.  டாக்டர்களை நேரடியாகச் சந்திப்பது குறைந்து ஆன்லைனில் கன்சல்ட் செய்யும் நிலை வரலாம்.  மருத்துவர்கள் தேவை அதிகரிப்பால், உலகமே இந்தியாவை நோக்கித் திரும்பும் சூழல் ஏற்படும்.

விமான போக்குவரத்து – இனி விமான போக்குவரத்து என்பது அவசியம் என்றால் மட்டுமே என்கிற நிலைக்கு வரும்.  விமானத்தில் செல்வது குறைவதுடன் கட்டணங்கள் மிக மிக அதிகமாகும்.  நிறைய விமான நிறுவனங்கள் காணாமல் போக வாய்ப்புள்ளது.

ரெஸ்டாரன்ட் &  ஹோட்டல்கள் – அடிக்கடி ஹோட்டலுக்கு செல்லும் பழக்கம் வெகுவாக குறையும்.  இனி ஹோட்டல்களில் சர்வ் செய்யும் முறைகளும் கிளீனிங் முறைகளும் முற்றிலுமாக மாற தொடங்கும்.  இணையம் ஆர்டர்கள் அதிக முக்கியத்துவம் பெறும்.

ஆடைகள் மற்றும் ஆடம்பர பொருட்கள் – உடுத்தும் உடைகளில் பெறும் மாற்றங்கள் வரலாம்.  இதற்கென செய்யும் செலவுகள் குறையலாம். விலை உயர்ந்த ஷூ போன்ற ஆடம்பர விசயங்களில் மக்களின் நாட்டம் குறையும்.  இளைஞர்களின் அனாவசிய ஷாப்பிங் கலாச்சாரம் இனி இருக்காது.  பொருட்களை விட மனிதர்கள் முக்கியத்துவம் உணரப்படும்.

அலுவலகங்கள் – இவற்றின் தேவை இனி மெல்ல மெல்லக் குறையும்.  பதிலாக WFH எனும் வீட்டிலிருந்தே பணி செய்யும் முறையும், வீடியோ கான்பரன்சிங் மூலமாக அலுவலக மீட்டிங்குகளை நடத்துவதும் அதிகரிக்கும்.  இதனால் அலுவலகங்களுக்கான இடத்தேவைக் குறைந்து நிறைய காலி இடங்கள் உருவாகலாம்.  இவை இனிவரும் காலங்களில் குடியிருப்புகளாக மாற அதிக வாய்ப்புள்ளது.  தற்போதைய புள்ளிவிவரங்களின் படி 76 மில்லியன் ச.மீ. காலியிடங்கள் உருவாக இருக்கின்றனவாம்.  இவை தோராயமாக 50,000 வீடுகளாக மாற இருக்கின்றன.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் – அட்மிசன், பரிட்சை போன்ற சில அவசியமானவற்றுக்குத் தவிர மற்ற விசயங்களுக்கென கல்விக்கூடங்களுக்குச் செல்வது குறைந்து ஆன்லைன் கிளாஸ் அதிகரிக்கும்.  ஆசிரியர்களும், மாணவர்களுமே இதனையே விரும்புவதாகத் தெரிகிறது.  இந்த இ-பயிற்சி கிராமப்புறங்களில் கூட அதிகரிப்பதை இனி தவிர்க்க முடியாது.

வாழ்க்கை முறை – இது இனி முற்றிலுமாக மாறிவிடவே அதிக வாய்ப்புள்ளது.  பணம் போன்றவற்றின் முக்கியத்துவம் குறைந்து குடும்பம் என்னும் விசயம் மிக அவசியமானதாகப் பார்க்கப்படும்.

 உணவுப்பழக்கங்களில் பெரும் மாறுதல்கள் ஏற்படும்.  அசைவ உணவில் நாட்டம் குறைந்து, சைவ உணவு அதிக பிரபலமாகும்.  வீட்டிலிருந்தே வேலை எனும் முறை அதிகரிக்க இருப்பதால் பெரும்பாலும் ஆண்கள் இனி குடும்பத்தினருடனேயே தங்கள் நேரங்களைச் செலவழிப்பர்.  வீட்டு வேலைகளில் ஆண்களின் பங்கு அதிகரிக்கும்.

-லெட்சுமி பிரியா