பெல்லாரி: கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ள 103 கொரோனா தொற்று நோயாளிகள், JSW ஸ்டீல் பிளான்ட்டுடன் தொடர்புடையவர்கள் என்பதால், அந்நிறுவனம் சார்ந்த ஆயிரக்கணக்கான நபர்களை கவலை தொற்றிக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஜிண்டால் குழுமத்தைச் சேர்ந்தது JSW ஸ்டீல் பிளான்ட். கர்நாடகத்தின் பெல்லாரி மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்நிறுவனம். இந்நிறுவனம் சார்ந்த வி.வி.நகர், ஷங்கர்குடா காலனி, தோரணகல்லு மற்றும் தாராநகர் ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் அதன் தொழிலாளர் குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதிகளில்தான் தற்போது பரந்தளவிலான கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தில் பணியாற்றிய 35 வயது பணியாளர் ஒருவர், பெங்களூரு வழியாக தமிழகத்திற்கு பயணம் செய்து, மீண்டும் பெல்லாரி வந்து சேர்ந்துள்ளார். தமிழகத்தில் அவரின் தயாருக்கு கொரோனா தொற்று இருந்திருக்க, அவருக்கும் தொற்றி, பெல்லாரியில், JSW ஸ்டீல் பிளான்ட்டில் பலருக்கும் அவர் பரப்பியுள்ளார்.

இந்த நிகழ்வையடுத்து, அத்தொழிற்சாலையில் பணிபுரியும் 10000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட அதிகாரிகள், பாசிடிவ் நபர்களுடன் தொடர்பிலிருந்தவர்களின் விபரங்களை சேகரித்து வருகிறார்கள்.

இந்த நிலையால், பெல்லாரி மாவட்ட கிராமங்களில் பீதி ஏற்பட்டுள்ளது. தங்கள் கிராமத்து சாலை வழியாக, அத்தொழிற்சாலை பணியாளர்கள் பயணம் செய்ய வ‍ேண்டாம் என்று கேட்டுக்கொள்ளும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளது.