கைவிரல் காயத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய பென்ஸ்டோக்ஸ்!

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ், காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இந்த நிகழ்வு, ராஜஸ்தான் அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியின்போது, கிறிஸ் கெய்ல் அடித்த பந்தை, பென் ஸ்டோக்ஸ் சிரமப்பட்டு பிடித்தார். இதனால், அவர் தனது இடதுகை ஆள்காட்டி விரலில் காயமடைந்தார்.

இதனையடுத்து, இந்த 14வது ஐபிஎல் சீஸனிலிருந்து அவர் விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணியில் எடுக்கப்பட்ட இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சரும் இத்தொடரில் இடம்பெறவில்லை.

தற்போது ஸ்டோக்ஸும் இல்லை என்பதால், ராஜஸ்தான் அணி நிர்வாகம் கலக்கமடைந்துள்ளது. இவருக்கு பதிலாக, டேவிட் மில்லர் அல்லது லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரில் ஒருவர் களமிறக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.