கொல்கத்தா: சீன அதிபர் ஜின்பிங்கின் உருவ பொம்மை என நினைத்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உருவ பொம்மையை எரித்து பாஜகவினர் நடத்திய போராட்டம் கேலி, கிண்டலுக்கு ஆளாகி உள்ளது.

லடாக் எல்லையில் சீன வீரர்கள் திடீரென நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் சீனா மற்றும் அந்நாட்டு பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கைகள் எழுந்தன. ஒரு கட்டத்தில் சீன தயாரிப்பு பொருட்களை சேதப்படுத்தி பாஜகவினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்நிலையில், இத்தகைய எதிர்ப்பை பதிவு செய்து பெரும் கேலி, கிண்டல்களுக்கு பாஜகவினர் ஆளாகி இருக்கின்றனர். சீனாவின் மீதுள்ள கோபத்தில், சீன அதிபர்  ஜின்பிங்கின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட களம் இறங்கினர் மேற்கு வங்க பாஜகவினர்.

அங்குள்ள அசான்சோலைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர்கள் ஜின்பிங் என்று  நினைத்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவப்படத்தை எரித்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இது சமூகவலைத்தளங்களில் கடும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

நாங்கள் சீனாவுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்கிறோம், லடாக்கில் என்ன நடந்தது. எனவே, சீனப் பிரதமர் கிம் ஜாங்-உன்’ உருவ பொம்மையை எரிக்கப் போகிறோம் என்றும் அவர் போராட்டத்தின் போது முழக்கமிட்டனர்.