அஸ்ஸாம் குடிமக்கள் பட்டியலில் பெங்காலிகள் நீக்கம்: பிரித்தாளும் சூழ்ச்சி நாட்டை அழிக்கும்….மம்தா கண்டனம்

--

கொல்கத்தா:

பங்களாதேஷில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் இறுதி வரைவு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

 

மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். அசாம் குடிமக்கள் பதிவேட்டில் சுமார் 40 லட்சம் மக்களின் பெயர் விடுபட்டுப் போனதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மம்தா நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ஓட்டுவங்கி அரசியலுக்காக 40 லட்சம் மக்களை அசாம் மாநிலத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்திய பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் எண்களை பெற்றுள்ள பலரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

இந்தியர்களான இவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இது குறித்து உள்துறை அமை ச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விவாதிக்கப்படும். அவர்களுக்கு சொந்தமாக வீடுகள் உள்ளன. அங்கேயே வாழும் உரிமை அவர்களுக்கு உண்டு. பட்டியலில் விடுபட்டுள்ளவகள் இந்துக்களோ, இஸ்லாமியர்களோ அல்ல, அவர்கள் அனைவரும் பெங்காலிகள்.

பெண்கள் உள்பட பலர் சிறையில் உள்ளனர். இவர்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை. மனிதாபிமான அடிப்படையில் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். பிரித்தாளும் சூழ்ச்சி நாட்டை சீரழித்துவிடும். இது தொடர்பாக மத்திய அரசு பெங்கால் மற்றும் பங்களாதேஷிடம் பேசவில்லை’’ என்றார்.