பெங்களூரு:

8 மணி நேரம் ரயில் தாமதமாக வந்ததால், கர்நாடகாவைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத முடியவில்லை.

நீட் தேர்வு எழுத வட கர்நாடகாவிலிருந்து ஹாம்பி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெங்களூரு நோக்கி 400-க்கும் மேற்பட்டோர் வந்தனர்.

ஞாயிறன்று காலை 6.30 மணிக்கு வர வேண்டிய அந்த ரயில், 8 மணி நேர தாமதத்துக்குப் பின் 2.36 மணிக்கு பெங்களூரை அடைந்தது.

தேர்வு அறையில் மாணவர்கள் 1.30 மணிக்குள் வந்து அமர வேண்டும். தாமதமாக வந்த 400 மாணவர்களையும் தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

தங்கள் கனவு தகர்ந்து விட்டதாகவும், மீண்டும் தேர்வு எழுத மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த ரயிலில் பயணம் செய்த முன் பதிவு செய்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும் 120 கி.மீ தொலைவுக்கு மாற்றுப்பாதையில் இந்த ரயில் செல்லும் என தகவல் அனுப்பப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் குமாரசாமி கோரிக்கை

இதற்கிடையே, கர்நாடக முதல்வர் குமாரசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வட கர்நாடகத்திலிருந்து நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள், ரயில் தாமதத்தால் தேர்வு எழுத முடியவில்லை.சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ரயில் தாமதத்தால் தேர்வு எழுதமுடியாத மாணவர்கள் தேர்வு எழுத பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.