சிலிக்கான் பள்ளத்தாக்கைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மிக சக்தி வாய்ந்த நகரமாக மாறிய பெங்களூரு

தென்னிந்திய நகரமான பெங்களூரு மென்பொருள் துறை நிறுவனங்களின் மையமாக (Hub) இருந்து வருகின்றது. அதன் சிறப்புகளுக்கு மேலும் ஒரு மணிமகுடமாக, சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு தரப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஜோன்ஸ் லாங் லசல்லே (JLL) எனும் கட்டுமான துறையில் முதலீடு செய்யும் நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளாக உலகெங்கும் உள்ள நகரங்களில் மிகவும் சக்தி வாய்ந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றது. சமீபத்தில் வெளியிடப்பட்ட நான்காம் ஆண்டு பட்டியலில், முன்னெப்பொழுதும் காணாத விதமாய், அமெரிக்கவிலுள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கு மற்றும் வியட்நாமின் ஹோ சி மின் நகரம் ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளி உலகின் மிக ஆற்றல் வாய்ந்த நகரமாக இந்திய நகரமான பெங்களூரு முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
ஒரு நகரத்தின் பொருளாதார மாற்றம் மற்றும் வணிக ரியல் எஸ்டேட் சந்தையின் மாற்றத்தின் வேகத்தை அந்த பட்டியல் கண்காணிக்கிறது. அது 134 முக்கிய முன்னணி மற்றும் வளர்ந்து வரும் வணிக மையங்களை உள்ளடக்கி, குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கு சிறந்த ஆற்றலை பராமரிக்கக் கூடிய நகரங்களை அடையாளம் காண்கிறது.
JLL பட்டியலிட்டுள்ள முதல் 10 நகரங்களில் பெங்களூரு, ஹோ சி மின் நகரம், சிலிக்கான் பள்ளத்தாக்கு, ஷாங்காய், ஹைதராபாத், லண்டன், ஆஸ்டின், ஹனோய், பாஸ்டன் மற்றும் நைரோபி உள்ளடங்கும்.

“பெரும்பாலான சக்திவாய்ந்த நகரங்கள், தொழில்நுட்ப மாற்றத்தைத் தழுவும், விரைவான மக்கள்தொகை வளர்ச்சியை ஏற்கும், உலகளாவிய இணைப்பை வலுப்படுத்தும் திறங்களை பகிர்ந்து கொள்கின்றன.

இந்தியா, சீனா மற்றும் வியட்நாமிலுள்ள நகரகங்களும் அமெரிக்காவிலுள்ள பல நகரங்களும் உலகின் வேகமாக மாறிவரும் நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன,” என்று ஜோன்ஸ் லாங் லசல்லே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகின்றது.
முதல் 30 வேகமாக மாறிவரும் நகரங்களில் பல நகரங்கள் ஆசிய-பசிபிக் நகரங்களில் உள்ளடங்கும். CMI யின் உலகளாவிய முதல் 30 நகரங்களில், ஆறு இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன, அதில் முதல் முறையாக நாட்டின் முதன்மை தொழில்நுட்பம் மையமான பெங்களூரு முதலிடத்தை பிடித்துள்ளது.
“உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் தற்போது நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர், இந்த விகிதம் அடுத்த சில பத்தாண்டுகளில் கணிசமாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதனால் நமது நகரங்களின் வெற்றி தான் அதன் வளர்ச்சியில் பெரும் முக்கியத்துவம் வகிக்கிறது,” என்று JLL உலகளாவிய ஆராய்ச்சியின் இயக்குனர் ஜெர்மி கெல்லி குறிப்பிட்டார்.
“பல்வேறு அரசியல் எழுச்சிகள் மற்றும் பொருளாதார உறுதியற்ற தன்மைகள் இருந்தபோதிலும்கூட, பல நகரங்கள் மெச்சும்படியான வளர்ச்சியைத் தொடர்ந்து காட்டி வருவதாக CMI குறிப்பிடுகிறது. அவர்களின் சுறுசுறுப்பும் வெளிப்படைத்தன்மையும் தான் உலக அளவில் ஏற்படும் ஒவ்வொரு புதிய மாற்றத்தையும் ஏற்று செயல்படுத்தி அவர்களின் வெற்றிக்கு காரணமாக உள்ளன.”
சென்னை, மணிலா, தில்லி மற்றும் மும்பை போன்ற சில ‘வளர்ந்து வரும் பெருநகரங்களிற்கு’ சக்திவாய்ந்த தொழிலாளர் சந்தைகள் தான் ஊக்கசக்தியாக உள்ளது என்று அறிக்கை குறிப்பிடுகின்றது . எனினும் இந்தக் குழு, அதிக அளவிலான சமத்துவமின்மை, நெரிசல் மற்றும் மாசு ஆகியவற்றால் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு மற்றும் வாழ்க்கை தரம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்கிறது.
நகரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சமீபத்திய மற்றும் திட்டமிடப்பட்டுள்ள மாற்றங்கள், மக்கள் தொகை, பெருநிறுவன தலைமையின் ஈடுபாடு, வர்த்தக ரியல் எஸ்டேட் கட்டுமானம் மற்றும் வாடகை உட்பட 42 காரணிகளைப் பயன்படுத்தி ஒட்டுமொத்தமாக 134 நகரங்களை CMI மதிப்பீடு செய்துள்ளது. கல்வி, புதுமை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற மற்ற காரணிகளும் சேர்க்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1, 2017 அன்று முழு ஆராய்ச்சி முடிவுகளையும் ஜோன்ஸ் லாங் லசல்லே வெளியிடும்.