பெங்களூரு:

பெங்களூருவில் முதியவர்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

ஹெல்பேஜ் இந்தியா என்ற தொண்டு நிறுவனம் சார்பில் உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு ஒரு சர்வே மேற்கொள்ளப்பட்டது. இதில் 50 சதவீத முதியோர் வீடுகளில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 44 சதவீத முதியோர் பொது இடங்களில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது தெரியவந்துள்ளது.

பொது இடங்களில் முதியோருக்கு வன்கொடுமை நிகழ்வதில் பெரு நகரங்கள் பட்டியலில் பெங்களூரு 70 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. ஐதராபாத் 60 சதவீதமும், மும்பை 33 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. குற்ற செயல்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள புதுடெல்லியில் முதியோருக்கு எதிரான வன்முறை பொது இடங்களில் 23 சதவீதம் என்ற நிலையில் உள்ளது.

2 ஆயிரத்து 377 ஆண்கள், 2 ஆயிரத்து 238 பெண்களிடம் 19 இந்திய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பேருந்து, மெட்ரோ ரெயில்களில் பெரும்பான்மையானர்கள் இருக்கை கொடுத்து உதவுவதாக முதியவர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வே மேற்கொள்ளப்பட்டதில் 43 சதவீதம் பேர் மெட்ரோ ரெயில்களையும், 78 சதவீதம் பேர் பேருந்துகளையும் பயன்படுத்துகின்றனர். இதில் மெட்ரே ரெயிலில் பயணிக்கும் 72 சதவீதம் முதியவர்கள் தங்களுக்கு இருக்கை வழங்கப்படுவதாகவும், பேருந்துகளில் பயணம் செய்வோரில் 62 சதவீதம் பேர் தங்களுக்கு இருக்கை வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஹெல்பேஜ் இந்தியா சிஇஒ மேத்யூ செரியன் கூறுகையில், ‘‘ முதியர்வகள் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவது மிக தீவிரமான விஷயமாகும். கடந்த காலங்களில் நடத்தப்பட்ட சர்வேக்கள், ஆய்வுகள் போன்றவற்றின் மூலம் வீடுகளில் முதியவர்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது அதிகமாக உள்ளது. அதனால் இந்த ஆண்டு பொது இடங்களில் இருந்து விலகி இது போன்று மன்னிக்க முடியாத குற்றத்தை மேற்கொள்ளும் பகுதிகளின் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு, ஐதராபாத், புவனேஸ்வர், சென்னை போன்ற நகரங்களில் பொது இடங்களில் முதியவர்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது அதிகமாக உள்ளது. இதன் மூலம் டெல்லியில் பொது இடங்களில் முதியவர்ளுக்கு சிறந்த மதிப்பு அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனையில் வயதான நோயாளிகளிடம் மோசமாக நடந்து கொள்வதில் டெல்லி 26 சதவீதமும், பெங்களூரு 22 சதவீதம் என்ற அளவில் உள்ளது.