Random image

‘பிளாஸ்டிக் ஃபிரி திருமணம்:’ கர்நாடக திருமண மண்டபங்கள் கண்டிப்பு

பெங்களூரு:

நாடு முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில் கர்நாடகாவில், பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத வகையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இது பெரும் வரவேற்பை பெற்றது.

ஏற்கனவே தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தானியங்களை கொண்டு திருமணம் நடத்தி சாதனை ஏற்படுத்திய நிலையில் தற்போது கர்நாடகாவிலும், பிளாஸ்டிக் இல்லாத வகையில் திருமணம் நடைபெறத் தொடங்கி உள்ளது.

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படாத திருமணம்

கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 11ந்தேதி கர்நாடக மாநில அரசு  பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடைவிதித்தது. அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டு விதிக்கப்பட்ட தடைகளை முழு அளவில் அமல்படுத்தும் வகையில் திருமண மண்டபங்களுக்கு கடந்த 7ந்தேதி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

திருமணங்கள் மற்றும் எந்தவொரு சமூக விழாக்களோ, நிகழ்ச்சிகளோ நடைபெற்றால், அப்போது பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்துள்ளது. சமூக நிகழ்வுகளின்போது  பிளாஸ்டிக் கழிவுகள் கட்டுப்படுத்த ஒரு முக்கிய நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, அங்குள்ள பெரும்பாலான திருமண மண்டபங்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த திருமண வீட்டாருக்கு தடைகளை விதித்துள்ளன. அதைத்தொடர்ந்து  பிளாஸ்டிக் வாழை உபயோகப்படுத்தவும் தடை விதிக்கப்பட்டு அதற்கு பதிலாக வாழை இலை உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. தண்ணீ ர் குடிக்க சில்வர் டம்ளர்கள், மற்றும் தேவைகளுக்கும் சில்வரிலான சிறிய பாத்திரங்கள், செராமிக்கலான பொருட்கள்  உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. தயிர் உபயோகத்துக்கு சிறிய ரக மண்பாண்டங்களும் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.

கர்நாடக மாநிலத்தில், ஏற்கனவே பல விற்பனையாளர்கள்  அரசு விதிகளை பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள், இது ஒரு பெரும் மாற்றத்தை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பல துண்டுப்பிரசுரங்கள் மூலமும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அரசின் அறிவிப்புக்கு பெரும்பாலான திருமண மண்டபம் மற்றும் சத்திரங்கள், நட்சத்திர விடுதிகள் ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இது போன்ற விதிமுறைகளை அறிவிப்பது ஒரு விஷயம் அல்ல ஆனால், அது அமல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்க வேண்டும் என்றும், தன்னார்வலர்களுடன் சேர்ந்து மக்களிடையே  விழிப்புணர்வு  ஏற்படுத்தினால், , குறிப்பிட்ட காலப்பகுதியில் பிளாஸ்டிக் தடை அமல்படுத்துவது உறுதி செய்யப்படும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் கூறி உள்ளார்.