பெங்களூரு போக்குவரத்து நெரிசல் : குதிரையில் சென்ற இளைஞர்

பெங்களூரு

பெங்களூரு நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் தனது பணியின் கடைசி தினத்தை குதிரையில் சென்று ஒரு இளைஞர் கொண்டாடி உள்ளார்.

பெங்களுரு நகரத்தில் போக்குவரத்து நெரிசல் சர்வ சகஜமானது.   பல நேரங்களில் ஒரு இடத்தை கடக்க சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஆகும்.   பெங்களூரு நகரம் தென் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகர் என புகழ் பெற்றது.   அத்துடன் பல்வேறு வகையான தொழில்களும் வர்த்தகங்களும் சுற்றுலாப் பயணிகளும் உள்ள நகரம் ஆகும்.  இத்தகைய நகரத்தில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் துயருக்கு உள்ளாகின்றனர்.

பெங்களூரு நகரில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ரூபேஷ் குமார் வர்மா.   இவர் பெங்களூருவில் மதிகரே என்னும் இடத்தில் வசித்து வருபவர்.   இவர் அலுவலகம் இங்கிருந்து 10 கிமீ தூரத்தில் உள்ளது.   இவர் இந்த தூரத்தை கடக்க ஒரு சில நாட்களில் 7 மணி நேரம் ஆகி விடுகிறது.  காலை 7 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் கிளம்பும் இவர் மதியம் 2 மணிக்கு அலுவலகத்தை சென்று அடைந்துள்ளார்.

இந்நிலையில் சொந்தமாக தொழில் தொடங்கிய எண்ணிய ரூபேஷ் குமார் தனது பணியை ராஜினாமா செய்தார்.   தனது பணியின் கடைசி தினமான நேற்று முன் தினம் ஒரு வெள்ளைக் குதிரையில் ஏறி அலுவலகம் சென்றுள்ளார்.   நீல நிற சட்டை, கருப்பு கால் சட்டை, தோளில் லாப்டாப் பை என குதிரையில் சென்ற இவர் தனது கழுத்தில் ஒரு போர்டை மாட்டிக் கொண்டு சென்றுள்ளார்.

அந்த போர்டில் ’மென்பொருள் பொறியாளராக என து கடைசி வேலை தினம்’   ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்தது.   இந்தப் புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகியது.  இது குறித்து ரூபேஷ் குமார், “நான் பெங்களூரு நகர போக்குவரத்து நெரிசலால் மிகவும் அவதிப் பட்டுள்ளேன்.   நான் ராஜஸ்தான் மாநிலத்தில் குதிரை சவாரி பழகியவன்.   ஆனால் அது பெங்களூரு நகரில் உபயோகப்படும் என நினைக்கவில்லை.

நான் இவ்வாறு செய்தது சமூக தளங்களில் பிரபலம் ஆவதற்காக அல்ல.   அதே நேரத்தில் எனது இந்த செய்கை பிரபலம் ஆகும் என்பதை நான் அறிவேன்.   இதன் மூலம் பெங்களூரு போக்குவரத்து நெரிசல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்னும் எண்ணத்தில் நான் இதை செய்துள்ளேன்”  என தெரிவித்துள்ளார்.