பெங்களூரு,

பெங்ளூருக்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்க ஜனாதிபதி கடந்த 17ந்தேதி வந்திருந்தபோது, அவர் கார் செல்லும் கான்வாயில், ஆம்புலன்சு வந்ததால், ஜனாதிபதி காரை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தார்,  அந்த பகுதியில் பணியாற்றிய டிராபிக் போலீஸ்காரர் நிஜலிங்கப்பா.

இதுகுறித்து பல்வேறு கேள்விகள், சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், டிராபிக் போலீசாரின் மனிதாபிமான செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

கடந்த 17ந்தேதி பெங்களூரு நகரில், நாகச்சந்திரா – எலச்சனஹள்ளி பசுமை பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா, பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு மெட்ரோ ரெயில் சேவையைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களுரு டிரினிட்டி சர்கிள் பகுதியில் டிராபிக் சப்-இன்ஸ்பெக்டர் நிஜாலிங்கப்பா பணியில் இருந்தார்.

அந்த வழியாகத்தான் மெட்ரோ விழாவிக்கு பிரணாப் முகர்ஜி வருவதாக இருந்தது. இதன் காரண மாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் ஆம்புலன்சு ஒன்று அவசரமாக வந்ததது. அதே நேரத்தில் ஜனாதிபதியின் கான்வாய் வந்துகொண்டிருந்ததால், பாதுகாப்பு கருதி, மற்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.

இதையறிந்த டிராபிக் இன்ஸ்பெக்டர் நிஜலிங்கப்பா, உடனடியாக மேலதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு,  ஜனாதிபதியின் கான்வாயை நிறுத்தி, தனியார் மருத்துவமனைக்கு  ஆம்புலன்சு  செல்ல வழி ஏற்படுத்தினார்.

டிராபிக் இன்ஸ்பெக்டரின்  இந்த செயல் காரணமாக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரது மனிதாபிமான செயல் குறித்து, சமூக வலைதளங்களில் பாராட்டு மழை குவிந்து வருகிறது.

டிராபிக் இன்ஸ்பெக்டர் நிஜலிங்கப்பாவின் செயலுக்கு, டிராபிக் போலீஸ் (கிழக்கு) துணை ஆணையாளர் அபீய் கோயல் பாராட்டு தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.

பெங்களூர் சிட்டி போலீஸ் ஆணையர் பிரவீன் சூத், கூறுகையில்,  “டிராபிக் சப்இன்ஸ்பெக்டரின் இத்தகைய முயற்சிக்கு வெகுமதி அளிக்கப்படும்” என்று கூறினார்.!

இந்த மனிதாபிமான செயல்குறித்து நிஜலிங்கபா கூறியதாவது,

ஆம்புலன்சு டிராபிக்சில் சிக்கியிருப்பதை கண்ட எனக்கு, ஏதாவது செய்து உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதைத்தொடர்ந்து,  என்னுடன் பணியாற்றும் சக காவலருக்கு அதுகுறித்து தகவல் தெரிவித்து, ஆம்புலன்ஸ் விரைவாக செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தேன் என்றார்.

பொதுவாக விஜபி யாராவது வந்துவிட்டால், அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு விஜபி வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி கொடுப்பதுதான் டிராபிக் போலீசாரின் வாடிக்கையான செயல்.

தமிழகத்தை பொறுத்தவரை, அதிலும் சென்னைவாசிகளை பொறுத்தவரை இதுபோன்ற அசவுகரியங்களை தினசரி பார்த்திருப்பார்கள்.

முதல்வராக ஜெயலலிதா இருக்கும்போது, அவரது கார் போயஸ் தோட்டத்தில் இருந்து கிளம்ப 10 நிமிடங்களுக்கு முன்பாகவே, அவரது கான்வாய் செல்லும் சாலைகள் அனைத்திலும் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படும்.

வேலைக்கு செல்வோர்,பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் செய்வதறியாது முனுமுனுத்துக்கொண்டே நிற்பார்கள்.

கடும் வெயிலானாலும், மழையானாலும் சென்னைவாசிகள் இதை கண்டிப்பாக அனுபவித்து இருப்பார்கள்…  இந்த வாகன நெரிசலில் எத்தனையோ ஆம்புலன்சுகள் மாட்டிக்கொண்டு, செய்வதறியாது, அதனுள் இருந்த நோயாளிகள் மரணத்தை எய்திய  நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது.

நமது டிராபிக் போலீசார் இதை கண்டும், காணாததுபோல் கடமையே கண்ணாக பணியாற்றிக் கெண்டிருப்பார்கள்…

ஆனால்,  பெங்களூரில் ஆம்புலன்சு செல்வதற்காக,  நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி காரையே நிறுத்தி வழி ஏற்படுத்திக்கொடுத்த டிராபிக் இன்ஸ்பெக்டர் நிஜலிங்கபா உண்மை யிலேயே ஹீரோதான். அவரை வாழ்த்துவதில் தவறில்லை.

அவருக்கு நாமும்  சல்யூட் செய்வோம்….