20 நாள் ஊரடங்கு அறிவிக்காவிட்டால் பெங்களூரு பிரேசிலாக மாறி விடும்: முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி கருத்து

பெங்களூரு: பெங்களூருவில் மேலும் 20  நாட்களுக்கு பொது முடக்கத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்று கர்நாடக முன்னாள்  முதல்வரும், மத  சார்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி. குமாரசாமி கூறியுள்ளார்.

உலகிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.  அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் முறையே முதல் 3 இடங்களில் இருக்கின்றன.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.40 லட்சமாக அதிகரித்துள்ளது. 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து விட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 312 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகாவில் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 142 பேர் இதுவரையில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந் நிலையில், பெங்களூருவில் மேலும் 20  நாட்களுக்கு பொது முடக்கத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்று கர்நாடக முன்னாள்  முதல்வரும், மத  சார்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி. குமாரசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர் இந்தியாவில் கொரோனா வைரஸ்  அதிவேகத்தில் பரவி வருகிறது. இப்போது, பிரேசிலை விட கொரோனா பாதிப்பில் நாம் முன்னோக்கி செல்கிறோமா? என்ற கேள்வி எழுந்துள்ளது என்று கூறியுள்ளார்.

மற்றொரு டுவிட்டர் பதிவில் அவர் மேலும் கூறி இருப்பதாவது: 20 நாட்களுக்கு பெங்களூருவில் லாக்டவுன் விதிக்கப்படுவதாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சரை நான் கேட்டுக் கொள்கிறேன்.

பெங்களூருவில்  தினக்கூலிகள்,  ஆட்டோ ஓட்டுனர்கள், நெசவாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் உதவித் தொகையை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் கர்நாடக அரசு  செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

You may have missed