Random image

விலங்குகளுடன் உறவு கொள்வது குற்றம் என்பது தொடரும்! : உச்சநீதிமன்ற இன்றைய தீர்ப்பில் விளக்கம்  

பாலினச்சிறுபான்மையினருக்கு எதிராக இருக்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 ஐ ரத்து செய்வதாக உச்சநீதிமன்றம் “விலங்குகளுடன் உறவு கொள்வது குற்றம் என்பது தொடரும்” என்றும் தெரிவித்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 ஆவது பிரிவு  என்பது முதன் முதலில், வெள்ளையர் ஆட்சியில் 1860 ஆம் வருடம்  மெக்காலே பிரபுவினால் கொண்டுவரப்பட்டது.

இந்தப் பிரிவு, “இயற்கை முறைக்கு மாறாக, ஆடவன் அல்லது பெண் எவருடனேனும், விலங்கு எதனுடனேனும் தன்னிச்சையாக காமவிகார உடலுறவு கொள்கிற எவரொருவரும் ஆயுள் சிறை தண்டனை; அல்லது 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை ஆகிய இவற்றில் இரண்டில் ஒன்றை தண்டனையாக விதிக்க வேண்டும். மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்” என்று கூறுகிறது.

பிரிட்டன் உட்பட மேற்கத்திய நாடுகளிலும் இதே போன்ற சட்டங்கள் இருந்தன. ஆனால் காலமாற்றத்தில், பாலினச்சிறுபான்மையினர் (தன்பாலின உறவு (ஆண்/ பெண்), இருபால் உறவு, திருநங்கை/நம்பி உறவு – Lesbian, Gay, Bisexual & Transgender ) உணர்வுகளை மதித்து இத்தகைய சட்டத்தை பல நாடுகளும் நீக்கிவிட்டன.

இதே போல இந்தியாவிலும் இச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற குரல் நீண்டகாலமாக ஒலித்துவந்தது.

இதுவரை இந்தியாவில் இச்சட்டத்தின் கீழ் யாரும் தண்டிக்கப்படவில்லை என்றாலும் ஆனால், தன்பாலின சேர்க்கையாளர்களும், திருநங்கைகளும் இச்சட்டத்தினால் தாங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக கருதுகின்றனர்.

இந்த நிலையில் 2001 ஆம் வருடம் நாஸ் என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் டில்லி உயர்நீதிமன்றத்தில், “377ம் பிரிவை ரத்து செய்ய வேண்டும்” என்று  பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்த விசாரணை முடிந்து கடந்த 2009ஆம் ஆண்டு ஜுலை 14ஆம் தேதி டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அஜீத் பிரகாஷ் ஷா மற்றும் முரளீதர் ஆகியோர் கொண்ட அமர்வு, பாலின சிறுபான்மையினரின் உடல்சார்ந்த செய்கைகள் குற்றச்செயல் அல்ல தீர்ப்பளித்தது. சட்டத்தின் 377ஆவது பிரிவை திருத்தவும் நாடாளுமன்றத்திற்கு நீதிபதிகள் பரிந்துரை செய்தனர்.

இந்த தீர்ப்பு தன்பாலின சேர்க்கையாளர்கள், திருநங்கைகளின் நல உரிமை அமைப்புகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனாலும் மதரீதியான அமைப்புகள் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்யப்பட்டன. 2013ஆம் வருடம் டிசம்பர் 11ஆம் தேதி உச்சநீதிமன்றம், 377ம் பிரிவு சரிதான் என்று தீர்ப்பளித்தது. அதாவது பாலின சிறுபான்மையினரின் உடல் சார்ந்த நடவடிக்கைகளை தடுப்பதே சரியே என்றது.

மேலும், இது தொடர்பான சட்டத்தை திருத்துவதும், திரும்பப்பெறுவதும் இந்திய அரசின் பொறுப்பு என்றும், நீதித்துறையின் பொறுப்பல்ல என்றும் அறிவித்தது.

இரு நீதிபதிகள் கொண்ட அமர்வினால் அளிக்கப்பட்ட இத்தீர்ப்பினை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான அமர்வு, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்விற்கு வழக்கை மாற்றம் செய்தது. தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில், கடந்த ஜூலை 17ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இந்நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய 5 பேர் கொண்ட அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்ளித்துள்ளது.

அதில் தன்பாலின உறவு குற்றமல்ல என தெரிவித்துள்ளது. அத்துடன் தன்பாலின உறவைத் தடை செய்யும் சட்டம் 377ஐ ரத்து செய்தது. மற்றவர்களுக்கு உள்ள உணர்வு மற்றும் உரிமை ஓரினச்சேர்க்கை சமூகத்தினருக்கும் உள்ளது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பாலினச்சிறுபான்மையினரின் உரிமைக்கு கிடைத்த வெற்றி என்று அவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தீர்ப்பினை வரவேற்றுள்ளனர்.

அதே நேரம் இத்தீர்ப்பு இன்னொரு கேள்வியையும் எழுப்பியுள்ளது. “377வது பிரிவை ரத்து செய்வதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது” என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த 377வது பிரிவில், “விலங்குகளுடன் உடலுறவு கொள்வதும் தண்டனைக்குரிய குற்றம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவை ரத்து செய்தால், விலங்குகளுடன் உடலுறவு கொள்வது சட்டப்படி தவறல்ல என்று அர்த்தமாகும். சமீபத்தில்கூட  அரியானாவில் கர்ப்பிணி ஆட்டை பலாத்காரம் செய்து கொன்றதாக எட்டுபேர் கைது செய்யப்பட்டனர். ஆகவே தற்போதைய தீர்ப்பு குறித்து சட்டவல்லுநர்கள் விளக்கவேண்டும்” என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுந்தர்ராஜனிடம் கேட்டோம். அவர், “பாலினசிறுபான்மையினரின் உரிமையைக்காக்கும் இந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதே நேரம், விலங்குகளிடம் உறவு கொள்வது (Bestiality ) என்பது குற்றம் என்பது தொடரும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்தார்.