இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துவிட்டது மத்திய அரசு.

வீட்டில் முடங்கியிருக்கும் இந்த நேரத்தை பயன்படுத்தி பலரும் ட்விட்டர் பக்கத்தில் ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி, ஒருவருக்கு ஒருவர் சவால் விடுத்து வருகிறார்கள்.

ஏப்ரல் 19-ம் தேதி அன்று #BeTheRealMan என்ற ஹேஷ்டேகை உருவாக்கினார் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா.மனைவிக்கு உறுதுணையாக வீட்டு வேலைகள் பார்த்து வீடியோ வெளியிட வேண்டும் என்பதே இந்த சவால் .அதில் முதலாவதாக இயக்குநர் ராஜமெளலிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ராஜமெளலி வீடியோவை வெளியிட்டு ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு பரிந்துரைத்தார். இருவருமே இந்த சவாலை ஏற்று மற்ற நடிகர்களுக்குப் பரிந்துரைத்தார்கள். இதில் ஜூனியர் என்.டி.ஆர், சிரஞ்சீவிக்கு பரிந்துரை செய்தார்.

#BetheRealMan சவாலை ஏற்று இன்று (ஏப்ரல் 23) வீட்டு வேலைகள் செய்வது, அம்மாவுக்கு தோசை ஊற்றிக் கொடுப்பது என வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சிரஞ்சீவி. அதனைத் தொடர்ந்து இந்தச் சவாலை தனது நண்பர்களான அமைச்சர் கே.டி.ராமா ராவ் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கு விடுத்துள்ளார்.