சென்னை: தமிழகத்தில் மீண்டும் கொரோனா  தொற்று வேகமாக பரவுவதால் 60வயதுக்கு மேல் உள்ள வேட்பாளர்களை தவிர்ப்பது நல்லது என அரசியல் கட்சிகளுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான  பீட்டர் அல்போன்ஸ் அறிவுரை கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஓராண்டை கடந்தும் தொற்று பரவல் கட்டுக்குள் அடங்காமல் உள்ளது. ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி முதன்முதலாக தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஓராண்டை கடந்தும் தொற்று பரவல் முற்றிலுமாக ஒழிக்கப்பட முடியாமல் நிலையே தொடர்கிறது. தற்போது வரையில், தொற்று பாதிப்புக்கு 8,54,554 பேர் ஆளான நிலையில்,  12,517 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் 3952 பேர் உள்ளனர்.

இடையில் அரசின் கடுமையான நடவடிக்கைகளால், முகக்கவசம் தனிநபர் இடைவெளி, ஊரடங்கு போன்றவற்றால்  தொற்றின் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது. ஆனால்,  கொரோனா தொற்று சமீப காலங்களில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், மக்கள் கூட்டமும், தேர்தல் பிரசாரங்களும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், தொற்று பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலேயே தொற்று பரவல்  விகிதம் உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  அதிகபட்சமாக, சென்னையில் கடந்த வாரம் 1.45 சதவிகிதமாக இருந்த தொற்று விகிதம், தற்போது  1.75 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர், திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தினமும்  குறைந்த பட்சம் 100 க்கும் அதிகமாக  இருப்பதாகவும், சென்னையில் கடந்த 15 நாட்களில் 209 குடும்பங்களில் 409 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக தெரிவித்துள்ளவர், சென்னையில் கொரோனா கண்டெயின்மென்ட் பகுதி மீண்டும் கொண்டு வரப்படும் என்று எச்சரித்தார்.

தற்போது, தேர்தல் காலம் என்பதால், கூட்டங்கள் சேரும் இடங்களில் தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம்  உள்ளதால்,  முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,

கொரோனா நோய் தொற்று மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சிகள் கூடுமானவரை 60 வயதுக்கு மேல் உள்ளவேட்பாளர்களை தவிர்ப்பது நல்லது. கொள்கை களத்தில் போராடவும், வென்றபின் மக்கள் பணி ஆற்றவும் இளமையின் சக்தியும் உடல் நலனும் மிகவும் தேவை. உலகம் இளைஞர்களின் கைகளில் செல்வதை உணர்க!  என்று எச்சரிக்கை செய்துள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் 60வயதுக்கு மேற்பட்டவர்களே உள்ள நிலையில், பீட்டர் அல்போன்ஸ் டிவிட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.