தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவராக இயக்குநர்  கே.பாக்யராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதுபவர்களுக்காக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

இந்தச் சங்கத்தில் 523 பேர் வாக்களிக்கும் தகுதியுள்ள நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 440 பேர் மட்டும் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் என சமீபத்திய சங்கத்தின் செயற்குழு தீர்மானித்தது.

சென்ற மாதம்   தேர்தல் குறித்து பொதுக் குழு அறிவித்தது. அப்போதே சங்கத்தின் தலைவராக எழுத்தாளரும், இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் இயக்குநர் விக்ரமன் கௌரவத் தலைவராகவும் ஒரு மனதாகத் தேர்தெடுக்கப்பட்டார்.

மீதமுள்ள 20 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என  அறிவிக்கப்பட்டிருந்தது.

 

தேர்தல் அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் செந்தில்நாதன் நியமிக்கப்பட்டிருந்தார்.

அவருடைய மேற்பார்வையில் தேர்தல் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. முக்கிய பொறுப்புகளுக்கு வேட்பாளர்கள்  போட்டியின்றி தேரந்தெடுக்கப்பட்டுவிட்டார்கள்.

சங்கத்தின் செயலாளராக கதாசிரியர், இயக்குநர் மனோஜ்குமார், பொருளாளராக கதாசிரியர், இயக்குநர் ரமேஷ் கண்ணா, துணைத் தலைவர்களாக கதாசிரியர், இயக்குநர் ஆர்கே.செல்வமணி, கதாசிரியர், இயக்குநர் ‘யார்’ கண்ணன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதேபோல் இணைச் செயலாளர்களாக கதாசிரியர், இயக்குநர் டிகே.சண்முகசுந்தரம் கதாசிரியர், இயக்குநர் சி.ரங்கராஜன், கதாசிரியர் வி.பிரபாகர், கதாசிரியர் மதுரை தங்கம் ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மீதமுள்ள 12 செயற்குழு உறுப்பினர்கள்  பதவிக்கு 15 பேர் போட்டியிட்டார்கள்.

இதில் ‘புது வசந்தம்’ அணியில் 12 பேரும், சுயேட்சைகளாக 3 பேரும் ம் போட்டியிட்டனர்.

இதற்கான தேர்தல்தான் நேற்று காலை வடபழனி திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.   உடனே எண்ணப்பட்டு தேர்தல்  முடிவுகள்    அறிவிக்கப்பட்டன.

வெற்றி பெற்றவர்கள் :

லியாகத் அலிகான் (218)

பாடலாசிரியர் விவேகா (208)

ஏ.வெங்கடேஷ் (208)

பேரரசு (203)

மனோபாலா (193)

அரிராஜன் (196)

பாலசேகரன் (195)

சாய் ரமணி (188)

கண்மணி ராஜா (186)

சின்னி ஜெயந்த் (175 )

ஹேமமாலினி (174)

யுரேகா (162) ஆகியோர் வெற்றி பெற்றார்கள்.

சுயேட்சைகளாக போட்டியிட்ட ஆதவன் (111), எம்.சி.சேகர் (101) ,மற்றும் ரவிசங்கர் (84) வாக்குகளை பெற்றார்கள்.

வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நேற்று மாலை அதே இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடைபெற்றது.