திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக மீண்டும் பதவி ஏற்றார் பாக்யராஜ்

சென்னை:

ர்க்கார் படத்தின் கதை,  திருட்டுக்கதை என்ற சர்ச்சை எழுந்த நிலையில்,  திரைப்பட எழுத் தாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலகிய பாக்யராஜ், இன்று மீண்டும் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழ் சினிமா எழுத்தாளர்களுக்காக தொடங்கப்பட்ட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இயக்குனர் கே.பாக்யராஜ் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் தீபாவளிக்கு வெளியான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்தின் கதை குறித்து சர்ச்சை எழுந்தது.  அந்த கதைக்கு உரிமை கோரி, உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

அதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பாக்யராஜ், அந்த கதை திருட்டுக்கதை என்பதை தெளிவு படுத்தினார். வருணுக்கு ஆதரவாக கடிதம் வழங்கினார்.

இந்த விவகாரம்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டது. இந்த விவகாரத்தில் படத்தயாரிப்பு நிறுவனமான சன் மூவிஸ், பாக்யராஜை டார்கெட் செய்தது. இதன் காரணமாக தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பாக்யராஜ்.

ஆனால், அவரது ராஜினாமாவை ஏற்க சங்க நிர்வாகிகள் மறுத்து வந்த நிலையில், பாக்யராஜ் மீண்டும் தலைவராக பதவி ஏற்கவில்லை என்றால், தங்களது பதவிகளையும் ராஜினாமா செய்யப்போவதாக  தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மனோஜ் குமார், யார் கண்ணன், விக்ரமன், செல்வமணி உள்பட21 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முன்வந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாக்யராஜ்  அவர்களை சமாதானப்படுத்தினார். அதைத்தொடர்ந்து சங்க நிர்வாகிகளின் வற்புறுத்தல் காரணமாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது பாக்யராஜ் உறுதி செய்தார்.