மோடி அரசுக்கு எதிராக  வரும் 14-ம் தேதி ‘பாரத் பச்சாவோ’ பேரணி! காங்கிரஸ் தலைமை அறிவிப்பு

டெல்லி

மோடி அரசுக்கு எதிராக  வரும் 14-ம் தேதி பாரத் பச்சாவோ (பாரதத்தை காப்பாற்றுவோம்)  பேரணி நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயாளர் கே.சி.வேணுகோபால்  தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவை யில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த மசோதா முஸ்லிம்களுக்கு விரோதமானது எனக் கூறி காங்கிரஸ், திமுக, உள்பட பல எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்த நிலையலும், அதையும்மீறி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய  காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால்,  “மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நேரடியான தாக்குதல் என்றும், இது மக்களின்  அடிப்படை உரிமைகள் மீதான நேரடியான தாக்குதல்  என்றும், மத்திய அரசு தாங்கள் சந்தித்தது வரும் உண்மையான பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, பொருளாதார வளர்ச்சிக் குறைவு போன்றவற்றில் இருந்து மக்களைத் திசைதிருப்பும் முயற்சியாக இருக்கிறது  எறு கூறியவர், மத்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷா நாட்டை தவறாக வழி நடத்துகிறார் என்றும் கடுமையாக சாடினார்.

இந்த மசோதா குறித்து,  அனைத்து விதமான சாத்தியக் கூறுகளையும் காங்கிரஸ் ஆராயும் என்றும்,  மோடி அரசுக்கு எதிராக,  வரும் 14-ம் தேதி பாரத் பச்சாவோ பேரணி (பாரதத்தை காப்பாற்றுவோம்) நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறோம்,  அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது,  மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக இந்த பேரணி அமையும் என்றும் கூறினார்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பேரணி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இருந்து தொடங்க உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா வத்ரா உள்பட முக்கிய மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.