Random image

பாரத் பந்த் – ஆதரிப்போம், வெற்றி பெறச் செய்வோம்: திருநாவுக்கரசர் அறிக்கை

சென்னை:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக வரும் 10ந்தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த பாரத் பந்த்துக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. தமிழகத்திலும், திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில்,  பாரத் பந்த்-ஐ ஆதரிப்போம் வெற்றி பெறச்செய்வோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்  கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் எவையும் காப்பாற்றப்படவில்லை. ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காட்டி பெட்ரோலியப் பொருட்களின் விலையை நாள்தோறும் மத்திய பா.ஜ.க. அரசு உயர்த்திக் கொண்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது அன்றைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மானியம் கொடுத்து மக்கள் மீது சுமையை ஏற்றாத வகையில் விலையை உயர்த்தாமல் இருந்தது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு பெட்ரோலியப் பொருட்களுக்கு மானியம் கொடுப்பதை முற்றிலும் ரத்து செய்து விட்டது.

கடந்த மே 16, 2014 அன்று காங்கிரஸ் ஆட்சி பதவியில் இருந்து விலகிய போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 106.24 டாலராக இருந்தது. ஆனால் தற்போது இது 73 டாலராக உள்ளது. அன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 71.41 ஆக இருந்தது ரூபாய் 83.22 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை அன்று ரூபாய் 55.49 ஆக இருந்தது தற்போது ரூபாய் 76.26 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல, ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான கலால் வரி 211 சதவீதமும், ஒரு லிட்டர் டீசல் மீதான கலால் வரி 443 சதவீதமும் உயர்த்தப்பட்டு மத்திய அரசு ரூபாய் 11 லட்சம் கோடி வருமானத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய வரி உயர்வை தவிர்ப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பெட்ரோலிய பொருட்களுக்கான வரி விதிப்பை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். ஆனால் நரேந்திர மோடி அரசு வரியை குறைத்து பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

2014 இல் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூபாய் 400 ஆக இருந்தது. அது தற்போது ரூபாய் 800 ஆக உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ பருப்பின் விலை ரூபாய் 70 ஆக இருந்தது, தற்போது ரூபாய் 170 ஆக உயர்ந்திருக்கிறது. ரயில் நிலையங்களில் நடைமேடை அனுமதி சீட்டு ரூபாய் 3 இல் இருந்து 20 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரு கிலோ மீட்டருக்கான ரயில் கட்டணம் ரூபாய் 6 ஆக இருந்தது ரூபாய் 9 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து இன்றைய நிலவரப்படி ரூபாய் 71.86 ஆக வரலாறு காணாத வகையில் உயர்ந்திருக்கிறது. இதனால் இந்திய பொருளாதாரமே மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

மக்களின் வாழ்வாதாரத்தை அனைத்து வகைகளிலும் பாதிக்கப்படுகிற வகையில் கலால் வரியை உயர்த்தி பெட்ரோலியப் பொருட்களின் விலையை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற மக்கள் விரோத மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிற வகையில் காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்களின் ஆலோசனை யின்படி அகில இந்திய காங்கிரஸ் கட்சி வருகிற 10.9.2018 திங்கட்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ‘பாரத் பந்த்” நடத்துவதென முடிவு செய்து அறிவித்திருக்கிறது. இதற்கு எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பும், ஆதரவும் பெறப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் நரேந்திர மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிற வகையில் பாரத் பந்த்தை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டியது அனைவரது கடமையாகும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகள், பொது மக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் ஆதரித்து ஒத்துழைத்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இது சம்மந்தமாக தி.மு.க. உள்ளிட்ட தோழமை கட்சிகள் மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் அனைத்தையும் அழைத்து பாரத் பந்த்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நாளை (8.9.2019) சனிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.