Random image

10ந்தேதி ‘பாரத் பந்த்’: நாளை தமிழக காங்கிரஸ் அலுவலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம்

டில்லி:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து 10ந்தேதி நாடு முழுவதும்  ‘பாரத் பந்த்’ நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்துக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில், 10ஆம் தேதி நடக்கவுள்ள நாடு தழுவிய பந்த் குறித்து ஆலோசிக்க  தமிழக காங்கிரஸ் கட்சி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

நாளை காலை 11 மணிக்கு  காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் செய்து வருகிறார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதாலும், கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதாலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து, பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.

10ந்தேதி நடைபெற உள்ள பந்த்துக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.