Random image

பாரத் பந்த்: டில்லி ஆர்ப்பாட்டத்தில் ராகுல் பங்கேற்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், டில்லியில் நடக்கும் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டார்.

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு வருவதைக் கண்டித்தும்  மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும்  இன்று  நாடுதழுவிய  முழு அடைப்பு காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து இன்று காலை முதல்  திட்டமிட்டபடி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட தனியார் வாகனங்கள் இயக்கப்படவில்லை. தமிழகத்தில் காவல்துறை பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயக்கப்படவில்லை. மணல் லாரிகளும் இயக்கப்படவில்லை.

இந்த நிலையில் முழு அடைப்பில் பங்கேற்றுள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் சாலை மறியல், ரெயில் மறியல், ஆர்ப்பாட்டம் என தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. டில்லி ராஜ்காட்டிலிருந்து ராம்லீலா மைதானம் நோக்கி நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி கலந்துகொண்டார்.  அவருடன் குலாம் நபி ஆசாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புவனேஸ்வரில் ரெயில் மறியல் மற்றும் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. சாலையில் அமர்ந்து பேப்பர் படித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விஜயவாடாவில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.  தெலுங்கானாவில் ஐதராபாத் மற்றும் யதாத்ரி புவனகிரி மாவட்டம் போங்கில் பகுதியில் காங்கிரஸ் கட்சியினரால்  போராட்டம் நடத்தப்பட்டது.

குஜராத் மாநிலம் பரூச் நகரில் போராட்டக்காரர்கள் சாலையின் நடுவே டயர்களை கொளுத்தி  வாகன போக்குவரத்தை தடை செய்தனர்.