டில்லி

பாரத் பயோடெக் நடத்தி வரும் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஆர்வலர் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்து சோதனை விரைவு ஆக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல உலக நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டு ஈடுபட்டுள்ளன.   இந்தியாவிலும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் தீவிரமாக உள்ளன.  இதில் பாரத் பயோடெக் தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகள் ஜூலை மாதம் முடிவடைந்தது.

 மூன்றாம் கட்ட சோதனைக்கு அனுமதி கோரிய பாரத் பயோடெக் நிறுவனத்தின் முதல் இரண்டு கட்ட சோதனைகள் அறிக்கையை அரசு கேட்டுள்ளது.  அந்த அறிக்கையில் 2 ஆம் கட்ட சோதனையில் நல்ல உடல் நலம் உள்ள 750 தன்னார்வலர்களுக்குப் பதில் 380 பேருக்கு மட்டுமே சோதனை நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இரண்டாம் கட்ட பரிசோதனையை விரைந்து முடித்து மூன்றாம் கட்டத்துக்குச் செல்வதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.  இந்த சோதனை அறிக்கையின் அடிப்படையில் தற்போது அரசு அனுமதி அளிப்பது குறித்து முடிவு எடுக்க உள்ளது.

அரசின் விதிமுறைப்படி சோதனையில் எவ்வித மாறுதல் செய்யப்பட்டாலும் அதை உடனடியாக தெரிவித்து அனுமதி வாங்குவது அவசியாகும்.  அவ்வாறு இருக்க இந்த சோதனையில் ஆர்வலர்களைப் பாதியாகக் குறைத்ததற்கு எவ்வித அனுமதியும் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.  எனவே மூன்றாம் கட்ட சோதனைக்கான அனுமதி கிடைப்பது சந்தேகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் மூன்றாம் கட்ட சோதனையை 26000 ஆர்வலர்களைக் கொண்டு நடத்தத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.  இவ்வாறு சோதனை நடத்தும் போதே அரசு விரும்பினால் உடனடியாக அறிமுகப்படுத்தி முழு அளவில் உற்பத்தி செய்யவும் தயாராக உள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.