மூக்கில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து சோதனைக்கு அனுமதி கோரும் பாரத் பயோடெக்

டில்லி

நேரடியாக மூக்கில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து முதல் கட்ட சோதனைக்கு அனுமதி அளிக்க மருந்து கட்டுப்பாடு இயக்குநரகத்துக்கு பாரத் பயோடெக் அனுமதி கோரி உள்ளது.

கடந்த வாரம் இந்திய அரசு சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசர கால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இந்த தடுப்பூசிகளைச் செலுத்தும் பணியின் ஒத்திகை தொடங்கப்பட்டுள்ளது.  சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள தடுப்பூசி ஆக்ஸ்ஃபோர்ட் பலகலை மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா கண்டு பிடித்ததாகும்.  பாரத் பயோடெக் நிறுவனம் தனது சொந்த தடுப்பூசியை உற்பத்தி செய்கிறது.

பாரத் பயோடெக் நிறுவன இயக்குநர் கிருஷ்ணா எலா, “நாங்கள் தற்போது மூக்கின் உள்ளே நேரடியாகச் செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதைக் கண்டறிந்துள்ளோம்.   இதற்காக நாங்கள் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்.  தற்போது ஊசி மூலம் இரு டோஸ்களாக அளிக்கப்படும் தடுப்பு மருந்துகளுக்கு மாற்றாக ஒரே முறை மூக்கு வழியாகச் செலுத்தும் மருந்து அமையும்.

வழக்கமாக ஊசி மூலம் செலுத்தப்படும் தடுப்பு மருந்தைக் காட்டிலும் இது போதிய பலன் அளிக்கும்.  இந்த தடுப்பு மருந்துக்கான முதல் கட்ட சோதனைக்கு அனுமதி கோரி இந்திய மருந்து கட்டுப்பாடு இயக்குநரகத்துக்கு விண்ணப்பித்துள்ளோம்,.  விரைவில் இந்த அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது.  அதன் பிறகு அந்த சோதனை நாக்பூர், புனே, புவனேஸ்வர், ஐதராபாத் ஆகிய நகரங்களில்  தொடங்க உள்ளது.

நாங்கள் இது போல் இரு மருந்துகள் குறித்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.  அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகம் மற்றும் வாஷிங்டன் பலகலைக்கழகம் ஆகியவற்றுடன் இதற்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்.  ஏற்கனவே அமெரிக்காவில் இவ்வகை தடுப்பு மருந்துகளின் சோதனை தொடங்கப்பட்டுள்ளன.  இந்த வகை மருந்துகள் கொரோனாவை எளிதாகத் தடுக்கலாம் என எதிர்பார்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

You may have missed